Published : 20 Mar 2020 06:53 PM
Last Updated : 20 Mar 2020 06:53 PM
பெல்ஜியத்தில் கரோனா வைரஸால் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெல்ஜியத்தின் தேசிய நெருக்கடி மையம் கூறும்போது, ''பெல்ஜியத்தில் புதிதாக 462 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெல்ஜியத்தில் 2,000 ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் காய்ச்சலால் 37 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60 வயதைக் கடந்தவர்கள் கரோனோவால் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
கோவிட்-19 காய்ச்சல் பரவல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெல்ஜியத்தில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை அனைவரும் மதித்து நடக்குமாறு பெல்ஜியம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக, இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு 10,405 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 2,52,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT