Published : 20 Mar 2020 06:20 PM
Last Updated : 20 Mar 2020 06:20 PM
கரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ''உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு 10,405 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 2,52,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80,000 பேர் கோவிட் -19 காய்ச்சலிருந்து மீண்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.
இனி வரும் நாட்களில் கோவிட் வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக, இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இத்தாலியில் வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்குத் தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT