Published : 20 Mar 2020 02:06 PM
Last Updated : 20 Mar 2020 02:06 PM
கரோனா வைரஸ் காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒருவர் ஈரானில் இறப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,284 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 18,407 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
கோவிட் - 19 காய்ச்சலால் ஈரான் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜகான்பூர் கூறும்போது, “ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் இறப்பதாகாவும், ஒரு மணிநேரத்தில் 50 பேர் பாதிக்கப்படுவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT