Published : 20 Mar 2020 08:04 AM
Last Updated : 20 Mar 2020 08:04 AM
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை எல்லாம் பதற வைக்கிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. உலகம் முழுவதும் வைரஸால் இதுவரை 2.19 லட்சம் பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,000 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. எனினும், இதுவரை கரோனா வைரஸை ஒழிக்கசரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்,கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாக பரவும் என்ற அச்சம் நிலவுகிறது. அது எப்போது உச்சத்தை அடையும் என்பதுதான் பெரும் கேள்விக்குறி? இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக லண்டன் சுகாதாரம் மற்றும் தொற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தைச் (லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் அண்ட் டிராபிக்கல் மெடிசின்) சேர்ந்த நிபுணர்கள், கரோனா வைரஸ் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிசெய்து வருகின்றனர். இந்நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறும்போது, ‘‘கரோனா வைரஸ்தொற்று எப்போது வேண்டுமானாலும் உச்சகட்டத்தை அடையலாம்’’ என்று எச்சரித்துள்ளனர்.
அதற்கேற்ப, சீனாவில் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைந்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். வைரஸ் தொற்று வரும் மே மாதம் உச்சகட்டத்தை அடையும் என்று நிபுணர்கள் சிலர் கணித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு குழுவினரில் ஒருவரான செபாஸ்டியன் பங்க் என்பவர் கூறும்போது, ‘‘சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரால், 1.5 முதல் 4.5 நபர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதன்படி, 10 லட்சம் பேர் அல்லது வூஹான் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கரோனாவால் பாதிக்கக்கூடும்’’ என்று கூறியிருக்கிறார்.
சீனாவில் மீண்டும் பரவும்
‘‘சீனாவில் கடந்த வாரம் முதல் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல தொடங்கி விட்டனர். கட்டுப்பாடுகள் அங்குத் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், கரோனா வைரஸ் மீண்டும் பரவக் கூடும்’’ என்று ஜப்பானின் ஒகைடோ பல்கலைக்கழக தொற்று நோயியல் நிபுணர் ஹிரோஷி நிஷியூரா எச்சரித்துள்ளார்.
இதன்மூலம் இந்த மாத இறுதியில் இருந்து மே மாத இறுதிக்குள் சீனா முழுவதும் 55 கோடி பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள். இது சீன மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு சீனாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஸோங் நன்ஷான், தனது குழுவினரும் கடந்த பிப்ரவரி மாதம் அவசர ஆலோசனை நடத்தினார்.
அவர் கூறும்போது, ‘‘பிப்ரவரி மாத இறுதியில் கரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடையும்’’ என்று கணித்துள்ளார். அதற்கேற்ப அங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்த விரிவான தகவல்களை ‘நேச்சர் ஜர்னல்’ என்ற இதழில் டேவிட் சிரனோஸ்கி தொகுத்து வழங்கி உள்ளார்.
இதற்கு முன்னர் ‘சார்ஸ்’ வைரஸ்தொற்று உலகை அச்சுறுத்தியது. பாதிப்புக்குக் காரணம் சார்ஸ் வைரஸ்தான் என்று முதன்முதலில் கண்டுபிடித்த சீன மருத்துவர்தான் ஸோங் நன்ஷான். அவர்தான் இப்போது கரோனாவைப் பற்றியும் கணித்து முன்கூட்டியே கூறியுள்ளார். தற்போது அவர் கூறும்போது, ‘‘சீனாவில் நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்துக்கு சீன அரசு தடை விதித்தது உட்பட பல்வேறு கடும் கட்டுப்பாடுகள்தான் அதற்குக் காரணம்’’ என்கிறார்.
அதற்கேற்ப கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கரோனாவைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று நேற்று தகவல் வெளியானது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு ‘யாரும் பாதிக்கப்படவில்லை’ என்று தகவல் வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கரோனா வைரஸால் இதுவரை சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
தீர்வு என்ன?
இதுபோன்ற சூழ்நிலையில், கரோனா வைரஸை ஒழிக்க எந்த நாடாவது மருந்து கண்டுபிடித்து உடனடியாக பயன்பாட்டுக்கு வந்தால் மட்டும்தான் தீர்வு என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT