Published : 10 Mar 2020 07:05 AM
Last Updated : 10 Mar 2020 07:05 AM
சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ‘கோவிட் - 19’ வைரஸ் உலகம் முழுவதையும் தற்போது நடுங்க செய்கிறது. லேசாக இருமல் இருக்கும் நபரை பார்த்தாலே அச்சம் ஏற்படும் அளவுக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்று குறித்தான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த வைரஸ் போல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே 8 கொடிய கிருமிகள் உலகை அச்சுறுத்தி உள்ளன. அவற்றின் விவரம்:
பிளேக் (கி.பி. 541 - 542 வரை)
கிழக்கு ரோமானிய பேரரசு என்ற அழைக்கப்படும் பைசாந்திய பேரரசின் தலைநகர் கான்ஸ்டான்டினோபிள். இந்த நகரை முற்றிலுமாக சிதைத்தது ஐஸ்டினியனின் பிளேக் நோய். விலங்குகளில் இருந்து பரவும் பிளேக் கிருமியால் ஒரே ஆண்டில் சுமார் 2.5 கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 5000 பேர் இறந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், பிளேக் நோயை மருத்துவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
புபோனிக் பிளேக் (1346 - 1353)
எலிகள் மற்றும் பிளேஸ் என்ற ஒட்டுண்ணிகளால் பரவும் தொற்று நோயே புபோனிக் பிளேக். 1346-53ம் ஆண்டுகளில் ஐரோப்பா, ஆசியா,ஆப்பிரிக்க கண்டங்களில் கறுப்பு மரணம்என்று அறியப்பட்ட இந்த நோயால்7.5 கோடி பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எலிகள் மூலம் பரவும் பிளேக் நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்று வரை புபோனிக் பிளேக் நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
காலரா தொற்று (1852 - 1860 வரை)
விபிரியோ காலரா என்ற பாக்டீரியா, உணவுப் பொருட்களில் கலப்பதினால் ஏற்படும் பாதிப்பே காலரா என்று அறியப்படுகிறது. இந்த தொற்று காரணமாக சிறு குடலில் அலர்ஜி ஏற்படும். பின்னர், தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே நோயாளி உயிரிழக்க நேரிடும். பல்வேறு கால கட்டங்களில் உருவான காலரா தொற்று, முதன் முதலாக இந்தியாவில் 1852-ம் ஆண்டு பரவியது.
கங்கை நதி மூலமாக ஆசியா முழுவதும் பரவிய காலரா ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் சுமார் 10 லட்சம் மக்கள் காலராவுக்கு இறந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு காலரா தொற்று இந்தியாவில் மீண்டும் ஏற்பட்டது. 2006 வரை நீடித்த அந்தத் தொற்று நோயால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இறந்ததாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் இந்தியாவில் தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
இன்புளுவென்சா (1918 - 1920)
ஸ்பெயின் நாட்டில் முதன் முதலாக எச்1 என்1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் சளி, காய்ச்சலை உண்டாக்கும் இந்த வைரஸ், நோயாளியின் நுரையீரலை ஓரிரு நாட்களிலேயே கடுமையாக பாதித்து உயிரை குடித்துவிடும். இன்புளுவென்சா தொடர்புடைய பன்றிக் காய்ச்சல் 1976-ம் ஆண்டு முதல் உலகம்முழுவதும் பரவி வருகிறது. இன்புளுவென்சா வகை தொற்று நோயால் உலகம் முழுவதும் இதுவரை 5 கோடிமக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆசிய சளி காய்ச்சல் (1956 - 1958)
இன்புளுவென்சா தொடர்புடைய எச்2என்2 வைரஸ் காரணமாக ஏற்படும் மற்றொரு நோய்தான் ஆசிய சளி காய்ச்சல். சீனாவில் இருந்து 1956-ம்ஆண்டு பரவத் தொடங்கிய இந்த வைரஸ்சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது. சுமார் 20 லட்சம் மக்கள் ஆசிய சளி காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். பின்னர் 1958-ம் ஆண்டுஐ.நா.வின் மருத்துவக் குழுவானதுஇந்நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து முற்றிலுமாக அழித்தது.
சார்ஸ் (2002-2004)
சீனாவில் இருந்து 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் பரவத் தொடங்கியது சார்ஸ் என்ற புதுமையான வைரஸ். 26 நாடுகளை கடுமையாக பாதித்த சார்ஸ் வைரஸால் 774 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்திய பல நோய்களின் பலி எண்ணிக்கையை விட இது குறைவு என்றாலும், தொலைத்தொடர்பு வளர்ச்சி பெற்று வந்த கால கட்டம் என்பதால் சார்ஸ் வைரஸ் குறித்து பல வதந்திகள் நோயை விட வேகமாக பரவின. இதனால், சார்ஸ் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியது. சார்ஸ் நோய்க்கான மருந்தை சீனா கண்டுபிடித்து முற்றிலுமாக ஒழித்தது.
ஜிகா வைரஸ் (2015 - தற்போது வரை)
மனிதர்களை ஜிகா என்ற கொசு கடிப்பதால், ஜிகா வைரஸ் தொற்று பிரேசில் நாட்டில் முதலில் பரவத் தொடங்கியது. பின்னர், தென் மற்றும் வடஅமெரிக்காவில் பரவிய ஜிகாவுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வகை வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பிற நோய்களை விட முற்றிலுமாக மாறுபட்டது. அதாவது, கர்ப்பிணி பெண்களை ஜிகா கொசு கடித்தால், அதன் மூலம் ஏற்படும் தொற்று, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். மேலும், சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும். இதுவரை 2,400 குழந்தைகள் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
எபோலா (1976- தற்போது வரை )
உலக மக்களை அச்சுறுத்திய கொடிய வைரஸ் நோய் என்றால் அது எபோலாதான். 1976-ம் ஆண்டு காங்கோவில் உள்ள எபோலா ஆறு அருகே எபோலா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எபோலா வைரஸ் தாக்கி சுமார் 280 பேர் உயிரிழந்தனர். பின்னர், 2013-ம் ஆண்டு வட ஆப்பிரிக்கா நாடான கினியாவில் எபோலா கண்டறியப்பட்டது. ஒரே மாதத்துக்குள் மொத்த ஆப்பிரிக்க நாடுகளுக்கும் எபோலா பரவியது. இதுவரை 14 ஆயிரம் மக்கள் எபோலா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். எபோலா நோய்க்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்போது கரோனோ வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுபோன்ற வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சுகாதாரமாக இருப்பது ஒன்றுதான் வழி.
ஆதாரம் : ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT