Published : 09 Mar 2020 02:33 PM
Last Updated : 09 Mar 2020 02:33 PM
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இதனை அவரது அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேருக்கும் அதிகமாகப் பலியாகியுள்ளார்கள். உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவில் மட்டும் 58 ஆயிரத்து 600 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. 19 ஆயிரத்து 16 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக போர்ச்சுக்கல்லின் 71 வயதான அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, தனது அனைத்து பொது நடவடிக்கைகளையும் ரத்து செய்தார். மேலும், லிஸ்பனில் உள்ள அதிபர் மாளிகையிலேயே தன்னை அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக அதிபர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. மற்றபடி அதிபருக்கு கோவிட்-19 காய்ச்சலுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போர்ச்சுக்கல் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
''போர்ச்சுக்கல்லில் 25 கரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. முன்னெச்சரிக்கையுடன் நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போர்ச்சுக்கல் அரசு மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் ஒரு மாணவர் குழு அதிபர் மாளிகையைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவருடனும் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பொதுவாக அனைவருக்கும் வாழ்த்து சொன்னாரே தவிர எந்த மாணவரையும் தனிப்பட்ட முறையில் பேசி வாழ்த்துகளை அவர் தெரிவிக்கவில்லை.
அதில் ஒரு மாணவருக்கு தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அதிபர் மாளிகை மூடப்பட்டுள்ளது. எனினும் அதிபருக்கு கோவிட்-19 குறித்த எந்தவிதமான பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.
முன்னெச்சரிக்கையின் காரணமாக அவர் தனது அனைத்து பொது நடவடிக்கைகளையும் ரத்து செய்துவிட்டார். லிஸ்பனில் உள்ள தனது அதிபர் மாளிகையிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். போர்ச்சுக்கலைப் பொறுத்தவரை அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா மக்களிடம் மிகுந்த பாசமுள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே''.
இவ்வாறு போர்ச்சுக்கல் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT