Published : 07 Mar 2020 06:41 PM
Last Updated : 07 Mar 2020 06:41 PM
நைல் நதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் 12 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் உட்பட 150 பேருக்கும் அதிமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எகிப்து அரசு இன்று அறிவித்துள்ளது.
ஜப்பானுக்கு வந்த கப்பலைப் போல அமெரிக்காவுக்குத் திரும்பிய கப்பலிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகவும் அவர்களில் 46 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 21 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று அறிவித்தார்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் 3400க்கும் அதிகமானோரை பலிவாங்கியுள்ளது. உலகின் 92 நாடுகளிலும் தற்போது பரவியுள்ள இந்நோய் 1 லட்சத்திற்கும் அதிகமான பேரிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானுக்கு வந்த கப்பலைப் போல அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ள 3500 பேர் தங்கியுள்ள பிரம்மாண்ட கப்பலிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். நைல் நதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எகிப்து அரசும் தெரிவித்துள்ளது.
முன்பு அதே கப்பலில் இருந்த ஒரு தைவான்-அமெரிக்கப் பெண் சுற்றுலாப் பயணி தைவானுக்குத் திரும்பியபோது அவருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. தற்போது கப்பலில் உள்ள அனைவரையும் பரிசோதித்த எகிப்திய அதிகாரிகளுக்கு உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்தது.
எகிப்தில் சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''எகிப்திய தெற்கு நகரமான லக்சோரில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் கரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கப்பல் குழு உறுப்பினர்கள் 12 பேரிடம் வேகமாகப் பரவும் வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. ஆனால், அவர்களிடம் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் சோதனையில் தென்படவில்லை.
எனினும், அவர்கள் 12 பேருக்கும் வைரஸ் நோயின் ஆரம்பக்கட்டம் என்பதால் எகிப்தின் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் முழுமையான கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
கப்பலில் உள்ள பயணிகளில் - இந்தியர்கள் அமெரிக்கர்கள், பிரஞ்சு மற்றும் பிற தேசங்களை உள்ளடக்கியவர்கள் இருக்கிறார்கள். பயணிகளும் கப்பல் குழுவினரில் உள்ள மேலும் பலரும் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
எகிப்தில் நோய் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை 15 ஆக உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சில நாட்களில் இது வந்தது. பிப்ரவரி பிற்பகுதியில் எகிப்து பயணத்தின்போது மூவரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புவதாக ஹூஸ்டன் நகர அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
டெக்சாஸ் சுற்றுலாப் பயணிகளிடையே நோய் பாதிப்பு ஏற்பட்ட அதே படகில் இருந்தபோதா, கப்பலில் நீண்ட காலம் தனிமைப்பட்டிருந்தபோதா? அல்லது ஆரம்பத்தில் தைவானிய சுற்றுலாப் பயணி வைரஸ் பாதிப்புக்குள்ளான காரணமா? அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏன் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை''.
இவ்வாறு எகிப்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT