Published : 06 Mar 2020 06:16 PM
Last Updated : 06 Mar 2020 06:16 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நடைபெற்ற அரசியல் பேரணியில் ஒன்றில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிபந்தனைகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும் கையெழுத்திட்ட சில நாட்களிலேயே இன்றைய தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
1995-ல் ஒரு மோசமான உள்நாட்டுப் போரில் மசாரி உள்ளிட்ட முஜாஹிதீன் குழுக்களிடையே ஏற்பட்ட சண்டையின்போது ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட 25 ஆம் ஆண்டின் நினைவாக ஷியா பிரிவு மக்கள் காபூல் அருகேயுள்ள டாஷ்-இ-பார்ச்சி பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஷியா பிரிவு அரசியல் தலைவர் அப்துல் அலி மாசியின் நினைவுப் பேரணி இன்று நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 27 பேர் பலியாகினர்.
அப்துல் அலி மசாரி நினைவு தினப் பேரணியில் நாட்டின் முக்கிய நிர்வாகி மற்றும் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் முக்கியப் போட்டியாளரான அப்துல்லா கலந்துகொண்டார். பேரணியில் கலந்துகொண்ட அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரவாதத் தாக்குதலில் காயமின்றித் தப்பினர்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஆப்கன் சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், ''இன்று காபூலில் நடைபெற்ற அப்துல் அலி மாசியின் நினைவுப் பேரணியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்'' என்றார்.
பேரணியில் தாக்குதல் நடத்தியவர்கள் பாதி கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பதுங்கியுள்ளதாகவும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளை வெளியேற்ற ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதாகவும் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்தார்.
இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT