Published : 02 Mar 2020 10:24 PM
Last Updated : 02 Mar 2020 10:24 PM
இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக 6 மாதங்களுக்கு முன்பே நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று உத்தரவிட்டார்.
தற்போதுள்ள நாடாளுமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அமைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் வரை அமைச்சரவையின் காலம் இருக்கும் நிலையில் தேர்தலை முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மாதம் நடத்தும் பொருட்டு கலைக்கப்பட்டுள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மூத்த சகோதரரும் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சவை இலங்கை பிரதமராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் காபந்து அரசின் தலைவராக மகிந்த ராஜபக்ச பிரதமராகத் தொடர்வார். அமைச்சர்கள் பதவியையும், அதிகாரத்தையும் இழப்பார்கள்.
இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, "இலங்கை நாடாளுமன்றம் நான்கரை ஆண்டுகளை இன்று இரவு நிறைவு செய்கிறது. நாடாளுமன்றத்தைக் கலைக்க இந்த காலக்கெடு போதும் என்பதாலும், தேர்தலை நடத்தும் பொருட்டு கலைக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 25-ம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நடக்கிறது. மே 14-ம் தேதி கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. மார்ச் 12 முதல் 19-ம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT