Published : 02 Mar 2020 05:29 PM
Last Updated : 02 Mar 2020 05:29 PM
சீனாவில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஆங்காங்கே கடும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, சில இடங்களில் காரில் செல்பவர்களை வலுக்கட்டாயமாக இறக்கி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய அதிரடி சோதனைகளை சூழ்நிலையின் நெருக்கடி கருதி சீனா முழுதும் செய்தாலும் மக்களில் பலர் இதில் கடும் எரிச்சலும் கோபமும் அடைந்துள்ளனர். கரோனா வைரஸுக்கு சீனாவில் பலி எண்ணிக்கை 3000 ஆகியுள்ளது, புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தாலும் மொத்தமாக சுமார் 78,000-80,000 பேர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நாடு முழுதும் காய்ச்சல் சோதனை, உள்ளிட்ட சோதனைகள் கெடுபிடியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் கடந்த பிப்ரவரி 6ம் தேதி மாஜியாங்வோ என்ற நபர் தன் மினிவேனில் சென்று கொண்டிருந்த போது லுவோ மெங் கிராமத்தின் செக் பாயிண்டில் இவரது வேன் சோதனைக்காக மடக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளுடன் இவர் ஒத்துழைக்க மறுத்து சண்டையிட்டார்.
அப்போதுதான் கத்தியைக் கொண்டு அதிகாரி ஒருவரை மார்பில் குத்தினார், பிறகு குத்தப்பட்ட அதிகாரியின் உதவிக்கு வந்த இன்னொரு நபரையும் கத்தியால் குத்தினார். இருவரும் கத்தி காயத்துக்கு பலியாகினர்.
ஆனால் கொலையாளி மாஜியாங்வோ ஓடி ஒளியவில்லை நேரடியாகச் சரணடைந்து உண்மையை வாக்குமூலமாகவும் அளித்தார்.
இருப்பினும் 23 வயதான மாஜியாங்வோவை கோர்ட் மன்னித்து தண்டனையைக் குறைவாக வழங்கவில்லை. ஞாயிறான நேற்று இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளித்தது கோர்ட்.
இது தொடர்பாக கோர்ட் கூறும்போது, “குற்றவாளி தானாகவே குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தாலும் குற்றத்தின் தன்மை தீவிரமானது என்பதால் மரண தண்டனை” என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT