Published : 02 Mar 2020 03:38 PM
Last Updated : 02 Mar 2020 03:38 PM
தங்கள் சொந்த நாடுகளில் வாழமுடியாமல் தஞ்சம் அடைவதற்கு ஏதோ ஒரு இடத்தை தேடிச் செல்லும் மக்களுக்கு இனி அனைத்து வாயில்களும் மெல்ல மெல்ல மூடப்படும் சோகம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதற்கு கரோனா வைரஸ் அச்சமே காரணம் என்று கூறப்படுகிறது.
சீனாவின் வுஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. பலநாடுகளிலும் பரவிய நிலையில் உலகையே இன்று அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இதுவரை உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கியோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களை நோக்கி புகலிடம் தேடி வருவோருக்கு கரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது போக்குவரத்து நுழைவை மூடுவதாக ஹங்கேரி இன்று தெரிவித்துள்ளது. நேற்று தந்நாட்டுக்குள் நுழைய இருந்த 10 ஆயிரம்பேரை வழியிலேயே நேற்று தடுத்து அனுப்பியது கிரேக்கம்.
உள்நாட்டு சண்டை மற்றும் போர் காரணமாக துருக்கி, சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனை பல நாடுகளும் அனுமதித்து வந்தன. எனினும் தற்போது இந்நாடுகள் வெளிநாட்டு மக்களை அனுமதிக்க தயக்கம் காட்டுகின்றன.
துருக்கியுடனான தனது எல்லையில் கிட்டத்தட்ட 10,000 புலம்பெயர்ந்தோரைத் தடுத்துள்ளதாக கிரீஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுநாள் வரை புலம்பெயரும் மக்களுக்கு திறந்த வாயிலாகத் திகழ்ந்துவந்த ஹங்கேரியும் இன்று அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹங்கேரியில் கரோனா வைரஸ் நோய்த் தாக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை, எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டுவருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது..
இதுகுறித்து ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனின் ஆலோசகரான ஜியோர்கி பகோண்டி செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:
போக்குவரத்து மண்டலங்களில் புதியவர்களை காலவரையின்றி அனுமதிப்பதை நாங்கள் இடைநிறுத்துகிறோம். கரோனா வைரஸ் மற்றும் சட்டவிரோத குடியேறியவர்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட தொடர்பை நாங்கள் காண்கிறோம்.
ஹங்கேரியில் கரோனா வைரஸ் நோய்த் தாக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை, எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
ஐரோப்பாவுக்குச் செல்லும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் சிரியா நாட்டினர் மட்டும் இல்லை. அவர்களைக் காட்டிலும் மிக அதிக அளவில் ஆப்கானியர்கள், பாலஸ்தீனியர்கள் அல்லது ஈரானியர்கள் உள்ளனர். இவர்களில் பலரும் ஈரானைக் கடந்திருக்கலாம். ஈரான் தற்போது கரோனா வைரஸ் அதிக அளவில் பரவியுள்ள ‘ஹாட்ஸ்பாட்’ ஆகும்.
ஹங்கேரி நாட்டு மக்களை மட்டுமல்ல, ஏற்கனவே தஞ்சம் கோருவதற்காக நாட்டுக்குள் வந்து காத்திருக்கும் 321 வெளிநாட்டினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனவே அனைவரின் நலன்களையும் கருத்தில்கொண்டு செர்பிய எல்லையில் வேலியில் கட்டப்பட்ட முகாம்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்துப் பாதைகள் மூடப்படுகிறது.
இப்பகுதியின் சாலைகள் மூடப்பட்ட பிறகு இவ்வழியே வர முயற்சிப்பது ஒரு மதிப்பிற்குரிய செயலாக இருக்க முடியாது. மீறி வருவோர் வழியிலேயே தடுத்து திருப்பி அனுப்பிவைக்கப்படுவர். இதற்காக காவல் படை அதற்கு துணையாக ராணுவமும் அப்பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
இவ்வாறு ஹங்கேரி பிரதமரின் ஆலோசகர் ஜியோர்கி பகோண்டி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT