Published : 02 Mar 2020 07:09 AM
Last Updated : 02 Mar 2020 07:09 AM

மலேசிய பிரதமராக பதவியேற்றார் மொகிதீன் யாசின்- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மகாதிர் முகமது வலியுறுத்தல்

பிரதமராக பதவியேற்ற மொகிதின் யாசின்.

கோலாலம்பூர்

மலேசியாவின் புதிய பிரதமராக மொகிதின் யாசின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஆனால் இது சட்டவிரோத செயல் என முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது (94) தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கடந்த 2018 நடைபெற்ற பொதுத்தேர்தலில் 4 கட்சிகளை கொண்ட நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய பூர்வகுடிகள் கட்சியின் தலைவர் மகாதிர் முகமது (94) பிரதமராக பதவியேற்றார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் கடந்த மாதம் 24-ம் தேதி பதவி விலகினார். எனினும், பிற கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் பதவியைப் பிடிக்க முகமது தீவிர முயற்சி மேற்கொண்டார். இதனால், கடந்த ஒரு வாரமாக புதிய பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், மலேசிய ஐக்கிய கட்சியைச் (பெர்சத்து) சேர்ந்தவரும் மகாதிர் அமைச்சரவையில் உள் துறை அமைச்சராக பதவி வகித்தவருமான மொகிதின் யாசினை புதிய பிரதமராக நேற்று முன்தினம் நியமித்தார் அந்நாட்டு மன்னர். இதையடுத்து, அரண்மனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மொகிதின் யாசின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். மகாதிர் கூட்டணி கட்சிகள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தன.

மொகிதின் யாசின் கூட்டணியில் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு (யுஎம்என்ஓ) இடம்பெற்றுள்ளது. இது, நீண்ட காலம் ஆட்சியில் இருந்த, ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கட்சி ஆகும். நஜிப் ராசக் பிரதமராக இருந்தபோது, யாசின் துணைப் பிரதமராக பதவி வகித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2015-ம் ஆண்டு யாசின் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து தனிக் கட்சி தொடங்கிய அவர், மகாதிர் முகமது கூட்டணியில் இணைந்து அமைச்சாரானார். இப்போது தாய் கட்சியின் ஆதரவுடன் பிரதமராகி உள்ளார்.

யாசின் பதவியேற்பதற்கு முன்னதாக, மகாதிர் முகமது கூறும்போது, “மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டது சட்டவிரோத செயல். தேர்தலில் வென்றவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் தோற்றவர்கள் அரசு அமைப்பதும் விசித்திரமாக உள்ளது. எனினும் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்துவோம்” என்றார்.

இதுபோல, யாசின் பிரதமராக பொறுப்பேற்றதைக் கண்டித்து பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘என்னுடைய பிரதமர் இல்லை’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x