Published : 02 Mar 2020 07:08 AM
Last Updated : 02 Mar 2020 07:08 AM

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து மனிதர்களிடம் பரிசோதனை

வாஷிங்டன்

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனா மட்டுமன்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த காய்ச்சல் வியாபித்து பரவியுள்ளது.

சீனாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் நேற்று 35 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 573 பேருக்கு காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79,824 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்து தென்கொரியாவில் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 3,736 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் 1128, ஈரானில் 978, ஜப்பானில் 947, சிங்கப்பூரில் 106, பிரான்ஸில் 100, ஹாங்காங்கில் 96, அமெரிக்காவில் 62, ஸ்பெயினில் 46, குவைத்தில் 45, தாய்லாந்தில் 42, தைவானில் 40, பஹ்ரைனில் 38, மலேசியாவில் 25, ஆஸ்திரேலியாவில் 24, பிரிட்டனில் 35, ஐக்கிய அரபு அமீரகத்தில் 19, வியட்நாமில் 16, கனடாவில் 14, இராக்கில் 13, சுவீடனில் 13, சுவிட்சர்லாந்தில் 10, குரேசியாவில் 6, நெதர்லாந்தில் 6, நார்வேயில் 6, இஸ்ரேலில் 5, ரஷ்யாவில் 5, பாகிஸ்தானில் 4 பேர் உட்பட ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 87,506 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவையும் சேர்த்து உலகம் முழுவதும் இதுவரை 2,994 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற நிறுவனம் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஜூலையில் வணிகரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்துக்கு புதிய மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் பயணிக்கு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவிலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x