Published : 28 Feb 2020 12:27 PM
Last Updated : 28 Feb 2020 12:27 PM
உலகம் முழுதும் கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சீனாவில் 2,788 ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வைரஸ் மையமான வூஹானில் சுமார் 11 மில்லியன் மக்கள் கிட்டத்தட்ட உள்நாட்டு அகதிகளாகிவிட்டதாக அந்த நகரில் வசிப்பவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வூஹான் நகரவாசியான குவோ ஜிங் என்பவர் தன் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடப்பதாகவும் உணவுப்பொருட்களை வாங ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். “இன்னும் ஒரு மாதத்திற்கு வாழ்வாதார சிக்கல் இல்லை, உப்பிட்ட முட்டைகள், காய்கறிகள் இருக்கின்றன” என்று அவர் ஏ.எஃப்.பி செய்தி ஏஜென்சி நிருபரிடம் தெரிவித்தார்.
முதலில் நகரம் சீல் வைக்கப்பட்டது, யாரும் நகரை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது, ஆனால் தற்போது வீட்டுக் காம்பவுண்டு சுவருக்குள்ளேயே வூஹான் மக்கள் அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டை விட்டே வெளியே வர முடியும் என்ற நிலை உள்ளதாக வூஹான் வாசிகள் சிலர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
ஜனவரி 23ம் தேதியிலிருந்து இந்த நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு தலையீட்டினால் பயங்கரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தினசரி வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்பது வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மனைவி 2 குழந்தைகளுடன் வசிக்கும் இன்னொரு வூஹான்வாசி பான் ஹாங்ஷெங், “வீட்டில் உள்ள உணவுப்பொருட்கள் தீர்ந்து விட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை, எங்கு வாங்குவது என்பதும் தெரியவில்லை” என்றார்.
சில சூப்பர் மார்க்கெட்டுகள் உணவுப்பொருட்களை ‘பல்க்’ஆக டெலிவரி செய்து வருகின்றன.
அவர் மேலும் கூறும்போது, “3 வயதுக் குழந்தைக்கு பால் பவுடர் இல்லை தீர்ந்து விட்டது. மேலும் என் உறவினர் வேறொரு பகுதியில் வசிக்கின்றனர், அவர்கள் 80 வயதானவர்கள் அவர்களுக்கு மருந்துகளை அனுப்ப முடியவில்லை, நான் அகதி போல் உணர்கிறேன்” என்றார்.
கடந்த வாரம் ஹூபேய் கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டி துணைச் செயலர் கூறும்போது, அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பதால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.
மொத்தமாக உணவுப்பொருட்களை பலர் ஆர்டர் செய்து வருவதால் சூப்பர் மார்க்கெட்டுகளில் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையேயும் ஆர்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
குழுவாக வாங்கும் சேவையைப் பயன்படுத்த சீன அரசின் ஆப் வீசாட் பயன்பட்டு வருகிறது.
5 காய்கறிகளின் 6.5 கிலோ கொண்ட பேக்கேஜின் விலை, அதாவது உருளைக்கிழங்குகள், முட்டைக்கோஸ் உட்பட 50 யுவான்கள் ஆகும். அதாவது அமெரிக்க டாலர்கள் கணக்கின்படி 7.11 டாலர்கள் விலை.
“நாம் நினைத்ததை வாங்க முடியாது, தெரிவு இல்லை, மேலும் குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பது கடினமாகியுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகள் குறைந்தபட்ச ஆர்டர் இருந்தால்தான் டெலிவரி செய்வதாக” வூஹான்வாசியான குவோ தெரிவித்தார்.
லாவோ கன் ஜாங் சூப்பர் மார்க்கெட்டின் யாங் நான் என்ற மேலாளர் கூறும்போது, “மினிமம் 30 ஆர்டர்கள் இருந்தால்தான் சப்ளை செய்ய முடிகிறது, நேர்மையாகக் கூற வேண்டுமெனில் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, எங்களிடம் 4 கார்கள்தான் உள்ளன. சிறிய ஆர்டர்களை சப்ளை செய்ய போதிய வேலையாட்கள் இல்லை” என்கிறார்.
மேலும் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் வெளியிலிருந்து பணியாளர்களைத் தேர்வு செய்ய அச்சம் கொள்கின்றனர், காரணம் கரோனாதான்.
சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன, தனிநபர்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள் விற்கக் கூடாது, பல்க் ஆர்டர்கள்தான் சப்ளை செய்யப்படவேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் உள்ளது.
அனைவருக்கும் சேர்ந்து ஆர்டர் செய்யும் போது விலை மற்றும் தரம் பெரிய பிரச்சினைகள் இருப்பதாக வூஹான்வாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“நிறைய தக்காளிகள், நிறைய வெங்காயங்கள் ஏற்கெனவே அழுகிக் கிடக்கின்றன, மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருட்கள் இதனால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு வருகின்றன” என்கிறார் பெயர் கூற விரும்பாத இன்னொரு வூஹான்வாசி.
இப்படியாக வூஹானில் அடிமட்ட எதார்த்தம் இருந்து வருகிறது, பலருக்கும் குழப்பங்களும் பீதியுமே எஞ்சியுள்ளன, அரசின் கட்டுப்பாடுகள், புதுப்புது அறிவிப்புகள் திகிலூட்டுபவையாக இருக்கின்றன என்று ஏ.எஃப்.பியிடம் வூஹான்வாசிகள் பலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT