Last Updated : 23 Feb, 2020 08:11 PM

 

Published : 23 Feb 2020 08:11 PM
Last Updated : 23 Feb 2020 08:11 PM

ஈரானில் தொடரும் கரோனா வைரஸ் பாதிப்பு: எல்லை வழியை மூடியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் - ஈரான் எல்லைப் பகுதி | கோப்புப் படம்.

கரோனா வைரஸின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஈரானுடனான தனது எல்லையைத் தற்காலிகமாக மூடிய பாகிஸ்தான், இன்று சுகாதார அவசர நிலையை அறிவித்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் 2,442 பேர் உயிரிழந்துள்ளனர். 76,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக ஈரானில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனது நாட்டிலும் கரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாக பாகிஸ்தான் தனது எல்லைப் பாதையை தற்காலிகமாக மூடியுள்ளது.

ஈரானில் இருந்து வரும் அனைத்து மக்களும் எல்லைப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் மிர் சியாவுல்லா லாங்கோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நாங்கள் ஈரான் எல்லையை மூடிவிட்டோம். கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தானின் மாகாண அரசாங்கம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) எல்லை நகரமான டஃப்டானில் 100 படுக்கைகள் கொண்ட கூடார மருத்துவமனையை அமைத்துள்ளது.

ஈரானில் இருந்து வரும் அனைத்து மக்களும் எல்லைப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஷியைட் பாகிஸ்தானியர்கள் ஈரானுக்கு பல்வேறு மதத் தளங்களைப் பார்வையிடப் பயணம் செய்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு பலுசிஸ்தான் சாலை வழியாக யாத்ரீகர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தானின் மாவட்டங்கள் சாகி, வாஷுக், பஞ்ச்கூர், கெச், குவாடர் உள்ளிட்டவை ஈரானின் எல்லையில் உள்ளன. இருப்பினும், சட்டப்பூர்வ போக்குவரத்தின் பெரும்பகுதி சாகியில் உள்ள தஃப்தான் வழியாக வருகிறது. எனவே அப்பகுதி இன்றிலிருந்து மூடப்படுகிறது’’.

இவ்வாறு மிர் சியாவுல்லா லாங்கோவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x