Last Updated : 23 Feb, 2020 06:20 PM

 

Published : 23 Feb 2020 06:20 PM
Last Updated : 23 Feb 2020 06:20 PM

71 ஆண்டுகளுக்குப் பின்: கரோனா கலக்கம்; சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார் அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் : கோப்புப்படம்

பெய்ஜிங்

சீனாவில் மோசமான பாதிப்புகளை கரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அதிபர் ஜி ஜின்பிங் இன்று அறிவித்தார்.

சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகரான வூஹானில் இருந்து பரவிய கரோனா வைரஸ், தற்போது அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் இன்று வரை கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 லிருந்து 77,000 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நேற்று 97 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிய கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் 630 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் சீன அரசால் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது பெரும் சிக்கலாக நாளுக்கு நாள் மாறி வருகிறது. சீனாவுக்கு அடுத்தார்போல், தென் கொரியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவி அந்த நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் பல நாடுகள் சீனாவுக்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

இந்த சூழலில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை சீன அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு ஊடகத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "சீனாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 2,400 பேர் உயிரிழந்துள்ளார்கள். 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து, பரவும் வேகம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதும், தடுப்பதும் கடினமாக இருக்கிறது. இது நமக்கான பிரச்சினை, நமக்கான சோதனை.

கரோனா வைரஸ் சீனாவின் மக்களுக்கு மட்டுமல்ல சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழுத்தம், பாதிப்பு குறுகிய நாட்களுக்குத்தான். இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். ஆதலால் சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x