Published : 13 Aug 2015 04:19 PM
Last Updated : 13 Aug 2015 04:19 PM
வட கொரிய அமைச்சரவையில் மூத்த அமைச்சர் சோ யோங் கோனுக்கு 'மரண தண்டனை' நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமைச்சரவையில் கடந்த 2014-ல் சோ யோங் கோன், அதிபருக்கு அடுத்தபடியான பதிவியில் இடம்பெற்றார்.
அதிபர் கிம் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு கொள்கைகளுக்கு சோ யோங் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு கடந்த மே மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் குறிப்பிட்டுள்ளது.
வட கொரிய நாட்டு விவகாரங்கள் குறித்து முதலில் செய்திகளை வெளியிடும் இந்த நிறுவனம், டிசம்பர் மாதம் நடந்த கிம் ஜோங் 2 நினைவு தின நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளது. இந்தத் தகவலுக்கு வட கொரிய தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.
சோ யோங் கோன் கொல்லப்பட்டதாக வெளியாகி இருக்கும் செய்தியை அடுத்து இந்த விவகாரத்தை தமது உளவுத்துறை மூலம் பின்தொடர்வதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம், வட கொரிய அதிபர் கிம் தலைமையில் நடைபெற்ற ராணுவ கருத்தரங்கில் தூங்கி, அவருக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இதே ஊடகம் செய்தி வெளியிட்டது.
இதுபோல கிம் அமைச்சரவையில் கிட்டத்தட்ட 70 பேர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டதாக யோன்ஹாப் ஊடகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT