Published : 23 Feb 2020 08:13 AM
Last Updated : 23 Feb 2020 08:13 AM
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் மீது அந்த நாடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் 24, 25-ம் தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவருடன் 12 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் வருகிறது. முதல்கட்டமாக 24-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அவர் செல்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார்.
அதிபரின் இந்திய பயணம் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர், வாஷிங்டனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாகிஸ்தான், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செய்தித் தொடர்பாளர் அளித்த பதில் வருமாறு:
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய வேண்டும் . இருநாடுகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்புகிறார்
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் மீது அந்த நாடு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியும். எல்லையில் இருநாடுகளும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வலியுறுத்துவார்.
இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. இந்த தேவையை அமெரிக்கா பூர்த்தி செய்யும். இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், எல்என்ஜி, நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி துறை ஏற்றுமதி 500 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தீவிரவாத ஒழிப்பு, இந்திய-பசிபிக் கடலில் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்துவதில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தியா வலுவான நாடாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக இந்திய-பசிபிக் கடலில் அமைதி, ஸ்திரத்தன்மை, சட்ட விதிகளை அமல்படுத்தும் ராணுவ பலத்துடன் இந்தியா வலுவாக இருக்க வேண்டும். இந்திய-பசிபிக் கடல் விவகாரத்தில் அமெரிக்காவின் முக்கிய தூணாக இந்தியா விளங்குகிறது. தாராளமய வர்த்தகம், சுதந்திரமான வான், கடல் போக்குவரத்து வழித்தடங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும்.
அமெரிக்கா, இந்தியா இடையிலான வணிகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
உலகின் நான்கு மிகப்பெரிய மதங்களின் பிறப்பிடம் இந்தியா. சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மதச் சுதந்திரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து மதங்களுக்கும் சமஉரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT