Published : 07 Aug 2015 01:00 PM
Last Updated : 07 Aug 2015 01:00 PM
நெதர்லாந்தில் ராணுவ பயிற்சிக்கு போதிய தோட்டாக்கள் இல்லாததால், வீரர்களை 'பேங், பேங்' என வாயால் கத்தி பயிற்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
நெதர்லாந்து ராணுவ தலைமைக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிய மின்னஞ்சல் கசிந்ததை அடுத்து இந்த ரகசிய அறிவுறுத்தல் வெளிப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு மிக அதிக அளவிலான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால், உள்நாட்டு பயிற்சிக்கு போதிய தளவாடங்கள் இல்லாததே இத்தகையச் சூழலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நெதர்லாந்து ராணுவத்தின் பயிற்சிக்கு போதிய வெடிபொருட்கள் கொள்முதல் செய்யாமல் இருப்பதால், பயிற்சி முறைகளை மாற்றிக்கொள்ளும் படி அந்நாட்டு ராணுவம் அறிவுறுத்தப்பட்டது.
வீரர்கள் அனைவரும் பயிற்சியின்போது, துப்பாக்கி குண்டு வெடிக்கும்போது எழும் சப்தம் போல 'பேங், பேங்' என ஒலி எழுப்பிக்கொள்ள அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மின்னஞ்சல் விவரத்தை உள்நாட்டு தொலைக்காட்சி பகிரங்கப்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் முன்னாள் ராணுவ மேஜர் ஹர்ம் டே ஜோங்கே இது குறித்து கூறும்போது, "இது மிகவும் மோசமான நிலைமை. வீரர்கள் குண்டு இன்றி பயிற்சி செய்யும்போது அவர்கள் தங்களது தன்னம்பிக்கையை இழக்கக்கூடும். இந்தப் பயிற்சியால் எந்தப் பயனும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து அடுத்த ஆண்டுக்குள், ராணுவத்துக்கு தேவையான வெடிபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்று நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "வீரர்களுக்கு இதில் மகிழ்ச்சியில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எப்போதுமே தேவையான தளவாடங்கள் இருப்பு இருகாது. தக்க நிதி ஒதுக்கீடுக்கு பின்னர் இந்த நிலை மாறும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT