Published : 21 Feb 2020 04:07 PM
Last Updated : 21 Feb 2020 04:07 PM
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த பரபரப்பான விசாரணை வழக்கு தொடர்பாக கடும் போய்களைக் கூறியதான குற்றச்சாட்டில் அமெரிக்க பெடரல் நீதிபதி அதிபர் ட்ரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்புத் தீர்ப்பளித்தார்.
சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட தீர்ப்பில் அமெரிக்க நீதிபதி ஆமி பெர்மன் ஜேக்சன் இந்த பரபரப்புத் தீர்ப்பை அளித்தார்.
67 வயதான ரோஜர் ஸ்டோன் அதிபர் ட்ரம்ப்பின் நீண்ட கால நண்பர் மற்றும் ஆலோசகர் ஆவார். இவர் நவம்பர் 15ம் தேதி அமெரிக்க காங்கிரஸில் பொய் கூறியதற்காகவும் நீதிக்கு இடையூறு செய்ததாகவும் சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார்.
“ஸ்டோன் சிலர் புகார் கூறியது போல் அதிபருக்கு ஆதரவாக இருந்ததற்காக விசாரிக்கப்படவில்லை, மாறாக அதிபரை இவர் குற்றச்சாட்டிலிருந்து பாதுகாத்தார் என்பதற்காகவே விசாரிக்கப்பட்டார்.
உண்மை என்ற ஒன்று இருக்கிறது, இன்னமும் இருக்கிறது. உண்மை முக்கியம். ஆனால் ரோஜர் ஸ்டோன் உண்மை இல்லை என்று வலியுறுத்தப் பார்த்தார். பொய்களை இவ்வளவு தைரியமாகவும் பொய்களை ஒரு பெருமையுடனும் கர்வத்துடனும் அவர் கூறியிருப்பது நம் ஜனநாயகத்தின் தூண்களை அசைத்துப் பார்ப்பதாகும்” என்றார்.
மேலும் ஸ்டோன் தன் சமூகவலைத்தளத்தில் இந்த நீதிபதியை மிரட்டும் விதமாக அவர் தலைக்கு மேல் துப்பாக்கிக் குறி இருப்பதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதையும் குறிப்பிட்ட நீதிபதி, “ஸ்டோனுக்கு தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகத் தெரியும். கோர்ட்டையும் நீதிபதையையும் நீதிபதியையும் மிரட்டும் செயலில் ஸ்டோன் ஈடுபட்டார், இதனை நீதியை செலுத்தும் கடமையால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார்.
நீதிபதி தீர்ப்பை வாசித்த போது தன் பெயருக்கேற்ப கல் போல்தான் நின்று கொண்டிருந்தார் ஸ்டோன். தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு கோர்ட்டுக்கு வெளியே, அவர் கூறும்போது, “நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை புலனாய்வுக் கமிட்டியின் தலைவரான ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஆடம் ஷிஃப் தன் ட்விட்டர் பக்கத்தில், “ட்ரம்ப்பைக் காப்பாற்றுவதற்காக குற்றம் இழைத்த ஸ்டோனுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது ஊழலுக்குத் துணைபோவதாகும்” என்றார்.
இந்த புலனாய்வுக் குழு விசாரணையின் போதுதான் ட்ரம்ப்பைக் காப்பாற்ற ஸ்டோன் பொய்களை அவிழ்த்து விட்டது நிரூபணமானது.
ரஷ்யாவுடன் சேர்ந்து ட்ரம்புடன் ஸ்டோன் சதிவேலையில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்படவில்லை என்ற நீதிபதி காங்கிரஸ் விசாரணையை குழப்பி விடும் செயலில் ஈடுபட்டது இதிலிருந்து விலகிய தனிப்பட்ட சம்பவமாகப் பார்க்க முடியாது என்றார். மேலும் நீதிபதி கூறும்போது, “விசாரணைக் கமிட்டி ஏதோ ட்ரம்புக்கு எதிரான சதிவேலை கும்பல் அல்ல, அவர்கள் பிரதிநிதிகள், சபையின் இருகட்சி பிரதிநிதிகளும் இருக்கும் ஒரு விசாரணை கமிட்டி, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இந்த கமிட்டி இருந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT