Published : 18 Aug 2015 10:24 AM
Last Updated : 18 Aug 2015 10:24 AM
கடந்த 1964 தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன் தேச துரோகக் குற்றம் சாட்டி முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தான் ஆட்சியின் இந்த அராஜகப் போக்கு கிழக்கு பாகிஸ்தான் மக்களைக் கொந்தளிக்க வைத்தது.
தவிர, அரசு அலுவலகங்களிலும் காவல் துறையிலும் ராணுவத்திலும் கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவே அங்கம் வகித்தனர்.
போதாக் குறைக்கு 1965-ல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது மேற்கு பாகிஸ்தான் கொஞ்சம் பாதுகாப்பாகவும் கிழக்கு பாகிஸ்தான் அதிக ஆபத்து கொண்டதாகவும் விளங்கியதாக எண்ணினர் கிழக்கு பாகிஸ்தான் மக்கள்.
இதைத் தொடர்ந்துதான் ஆறு அம்ச திட்டம் ஒன்றை அரசுக்கு முன் வைத்தார் முஜிபுர் ரஹ்மான். இந்த திட்டத்தை சுருக்கமாக இப்படிப் பட்டியலிடலாம். ஒன்று, பாகிஸ்தான் அரசு என்பது மக்கள் தேர்ந்தெடுத்து அமைந்த ஒன்றாகவே இருக்க வேண்டும். இரண்டு, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இரண்டு மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். பிறவற்றைத் தீர்மானிக்கும் உரிமை அந்தந்தப் பகுதிகளின் ஆட்சிகளுக்கு விடப்பட வேண்டும். மூன்று, மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் பகுதிகளுக்குத் தனித்தனி நாணயம் அமைய முயற்சிக்க வேண்டும். நான்கு, வரி விதிப்பு மற்றும் வருவாய்த்துறை போன்றவை அந்தந்தப் பகுதிகளின் அரசுகளிடம்தான் அளிக்கப்பட வேண்டும். ஐந்து, அந்நியச் செலவாணி கணக்குகள் பாகிஸ்தானின் இருபகுதிகளுக்கும் தனித்தனியாக ஆவணப்படுத்த வேண்டும். ஆறு, கிழக்கு பாகிஸ்தானுக்கென்று தனி ராணுவம் இருக்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் கொஞ்சம் பிரிவினைப் போக்கு தென்பட்டது என்றாலும் கிழக்கு பாகிஸ்தான் மக்களின் பேராதரவு இந்த ஆறு அம்ச திட்டத்துக்கு இருந்தது.
இந்த நிலையில்தான் தேர்தலில் 167 தொகுதிகளைக் கைப்பற்றியது அவாமி லீக்.
பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் பதறிப்போனார். சுயாட்சி, தன்னாட்சி என்றெல்லாம் கோஷ மிடுபவர் முஜிபுர். தவிர அளவில் சிறியதாக இருந்தாலும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் தன்வசம் கொண்டிருந்தது கிழக்கு பாகிஸ்தான். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி அவாமி லீக்குக்குத் தான் என்றாகிவிட்டது. ‘முதல் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கிழக்கு பாகிஸ்தானுக்குத் தன்னாட்சி அந்தஸ்து வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேறிவிட்டால் அதற்குப் பிறகு தன் பதவி, அதிகாரம் என்னாவது?’’.
இந்தப் பாதையில் யோசித்த யாஹ்யா கான், ‘‘நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன் முஜிபுர் ரஹ்மானும் (பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரான) புட்டோவும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைய வேண்டும்’’ என்று ஒரு நிபந்தனையை விதித்தார். ‘‘அதுவரை முதல் நாடாளுமன்றம் தள்ளிப் போடப்படும்’’ என்றார்.
இரு தலைவர்களையும் 1971 மார்ச் 3 அன்று சந்திக்க வைத்தார். இது அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு சந்திப்பாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்தச் சந்திப்பு நடக்குமா என்று பலர் சந்தேகம் தெரிவித்தாலும் அது நிகழ்ந்தது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தேசிய அளவில் வேலை நிறுத்தம் என்று அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான். குறைந்தது கிழக்கு பாகிஸ்தான் முழுவதிலும் வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதனிடையே கிழக்கு பாகிஸ்தானின் ஆளுநராக டிக்கா கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஒரு ராணுவத் தளபதி. இவரது நியமனத்தை கிழக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. ஏனென்றால் அடக்கு முறைக்காகத்தான் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்ற எண்ணம் பரவிவிட்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த நீதிபதிகள், டிக்கா கானுக்கு ஆளுநருக்கான பதவியேற்பு உறுதிமொழியை செய்து வைக்க மறுத்தனர்.
ராக்கெட் வேகத்தில் பதற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ‘கிழக்கு பாகிஸ்தானை வன்மையாக அடக்கி வைக்க வேண்டும்’ என்று மேற்கு பாகிஸ்தானிலுள்ள ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த ஒரு கப்பல் கிழக்கு பாகிஸ்தானிலுள்ள சிட்டகாங் துறைமுகத்தை நோக்கிச் சென்றது. அதில் ராணுவ வீரர்கள் நிறைந்திருந்தார்கள். கூடவே யுத்தத் தளவாடங்களும் இருந்தன.
கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காளத் தொழிலாளர்கள் அந்தக் கப்பலில் இருந்த பொருட்களை கீழே இறக்க மறுத்தார்கள். இதன் காரணமாக இருதரப்பினரிடையே கடும் சண்டை ஏற்பட்டது.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT