Published : 01 Feb 2020 03:43 PM
Last Updated : 01 Feb 2020 03:43 PM
ஐரோப்பிய யூனியனில் 47 ஆண்டுகாலமாக உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன், நீண்ட இழுபறிக்கு பின் அதில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
பிரிட்டன் வெளியேறியதால் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அந்நாட்டு கொடிகள் இறக்கப்பட்டன .பிரிட்டன் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழக்கின்றனர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு பிரிட்டன் பாஸ்போர்ட்டுகள் மாறும். சர்வதேச வர்த்தகத்தில் பிரிட்டன் தன் சொந்த விருப்பத்தின்படி பேச முடியும். இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில், பிரெக்ஸிட்’ நினைவாக ‘ஜனவரி 31’ தேதியை தாங்கிய அரை பவுண்ட் மதிப்புள்ள 50 பென்ஸ் நாணயங்கள் இன்று புழக்கத்துக்கு வருகின்றன.
இந்நிலையில், லண்டனில் உள்ள செயிண்ட் பான்கிராஸ் ரயில் நிலையத்திலிருந்து பிரிட்டன் எக்ஸிட்டுக்கு முந்தைய கடைசி யூரோஸ்டார் ரயில் பாரீஸுக்குப் புறப்பட்டது.
லண்டனிலிருந்து இந்த யூரோஸ்டாரில் புறப்பட்ட பயணிகள் வருத்தம், கோபம், கவலையை வெளியிட்டனர், சிலர் ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர், ஆனால் இத்தனையாண்டு கால ஐரோப்பிய ஒன்றிய பிணைப்பிலிருந்து விடுபட்டு ‘தெரியாத, அறியாத’ பிரதேசத்தில் பிரிட்டன் காலடி எடுத்து வைப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரிட்டனிலிருந்து புறப்பட்ட கடைசி யூரோ ரயில் யூரோஸ்டார் பயணியும், பாதுகாப்பு ஆலோசகருமான மார்டின் கவனா, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “இது வாழ்நாளின் மிகவும் துக்ககரமான தினம், வெளியை நோக்கி பயணம் செய்வதற்குப் பதிலாக பிரிட்டன் உள்முகமாகத் திரும்பியுள்ளது, இது உலகிற்கு ஒரு செய்தியாகும்” என்றார், இவர் இங்கிலாந்து அணி பிரான்ஸுடன் மோதும் ரக்பி போட்டியைக் காண யூரோஸ்டார் ரயிலில் பாரீசுக்கு நேற்று புறப்பட்டார்.
ஆனால் பயன் படேல் என்ற பல் மருத்துவர் இதே ரயிலில் பாரீசுக்குச் செல்லும் போது கூறுகையில், ‘பிரிட்டனின் தனித்துவம் தெரிய வேண்டும், பிரெக்சிட் பற்றி ஏன் இவ்வளவு எதிர்மறை மனோநிலை, அவநம்பைக்கைகள்?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், “நாம் கால்களில் நிற்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது நல்லது, ஏன் இத்தனை அவநம்பிக்கை இதன் மீது?” என்றார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியலித்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக கடைசியாக லண்டனிலிருந்து யூரோஸ்டார் ரயில் புறப்பட்டது.
2ம் உலகப்போருக்குப் பிறகு கடும் நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்ததையடுத்து ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் உருவானது, ஆனால் இந்த கடைசி ரயில் வரலாற்றில் வேறொரு தருணம் பிறப்பதன் குறியீடாகவும் ஒரு பெரிய ஒற்றுமையின் குறியீடாகவும் லண்டன் செயிண்ட் பான்கிராச் ரயில் நிலையத்திலிருந்து பாரீஸ் புறப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சக்தி வாய்ந்த உறுப்பு நாட்டை இழந்து விட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குடிமகன் ஆலன் ரோன் கூறும்போது, “இந்தப் பிரிவினியால் யாவருக்கும் எந்த ஒரு பயனும் இல்லை, நாம் மோசமாகத்தான் போவோம்” என்றார்.
நேற்று புறப்பட்ட யூரோஸ்டார் ரயிலின் எதிர்காலம் என்னவென்பது தெரியவில்லை. இந்த ரயில் சேவை ‘எல்லைகளற்ற ஐரோப்பா’ என்ற கருத்தாக்கத்தின் குறியீடாக இருந்தது.
ஆனால் பிரிட்டனின் இந்த குட் பை, குறுகிய கால குட்-பை தான், மீண்டும் இணைந்து விடும் என்று பலரும் நம்பிக்கைத் தெரிவித்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT