Last Updated : 22 Jan, 2020 12:50 PM

 

Published : 22 Jan 2020 12:50 PM
Last Updated : 22 Jan 2020 12:50 PM

மீண்டும் காஷ்மீர் குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் ஆலோசனை

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : படம் உதவி ட்விட்டர்

நியூயார்க்

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பேசினேன். தன்னால் முடிந்தால் உதவிகள் செய்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம், இதில் மூன்றாவது நாடு தலையீட்டை விரும்பவில்லை என்று இந்தியா பலமுறை வலியுறுத்தியுள்ள நிலையில் டிரம்ப் பேசியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி தன்னிடம் மத்தியஸ்தம் செய்ய உதவி கோரினார் என்று கடந்த முறை பேசி அதிபர் ட்ரம்ப் சிக்கலில் மாட்டிக்கொண்டார். ஆனால், இந்த முறை அதுபோல் இல்லாமல் மிகவும் கவனத்துடன் வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்துவரும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சென்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அங்கு சென்ற நிலையில், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினார்கள்.

இம்ரான் கானுடனான சந்திப்பு குறித்து அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசினேன். அப்போது இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசினேன். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நட்புறவு எந்த நிலையில் இருக்கிறது, எவ்வாறு செல்கிறது என்பது குறித்துக் கேட்டேன். எங்களால் முடிந்தால், நிச்சயம் காஷ்மீர் விவகாரத்தில் உதவி செய்வோம் எனத் தெரிவித்தேன்.

அதேசமயம், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான நட்புறவு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக இருந்து வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று இம்ரான்கான் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய விவகாரம். ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த நாடுகளும் செய்ய முடியாத வகையில், அமெரிக்கா முடிந்தவரை இந்த விஷயத்தில் உதவும் என்று தெரிவித்தேன்.

இந்தியா பயணத்தின் போது பாகிஸ்தான் செல்லும் திட்டம் ஏதும் இப்போது இல்லை. இருதரப்பு நாடுகளின் வர்த்தகத்தை வலுவாக வளர்ப்பது முக்கியம், அதற்கு அதிகமான முன்னுரிமை அளிப்பது அவசியம் எனக் கருதுகிறேன்
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x