Published : 19 Aug 2015 10:34 AM
Last Updated : 19 Aug 2015 10:34 AM
மார்ச் 7, 1971 அன்று முஜிபுர் ரஹ்மான் ஓர் உணர்ச்சிமிகு உரையை ஆற்றினார். அதில் நான்கு அம்ச திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
அடக்குமுறைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். கிழக்கு பாகிஸ்தானில் நீக்கமற நிரப்பப்பட்டிருந்த ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும். அடக்குமுறை காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரங்கள் உடனடியாக வழக்கப்பட வேண்டும்.
அந்தப் பக்கம் புட்டோ அடக்குமுறை எண்ணங்களுக்கு உரம் சேர்த்துக் கொண்டிருக்க இந்தப் பக்கம் முஜிபுர் ரஹ்மான் பிரிவினைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.
‘‘கிழக்கு பாகிஸ்தானிலுள்ள ஒவ்வொரு வீடும் அடக்குமுறைக்கு எதிரான கோட்டையாக வேண்டும்’’ என்றார். தன் உரையின் முத்தாய்ப்பாக ‘‘இம்முறை நமது போராட்டம் என்பது விடுதலைக்கானது. இது நமது சுதந்திரப் போராட்டம்’’ என்றார்.
மூண்டது மேற்கு - கிழக்கு பாகிஸ்தான் யுத்தம்.
மார்ச் 25 இரவு அன்று பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தான் மீது வெளிப்படையாகவே தனது தாக்குதலைத் தொடங்கியது. இதை ‘இனப்படுகொலை’ என்றே பின்னர் பலரும் வர்ணித்தனர்.
கிழக்கு பாகிஸ்தானிலுள்ள வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்திலிருந்த வங்காளிகள் அனைவரும் நீக்கப்பட்டனர் அல்லது ஆயுதம் ஏந்த முடியாத பதவிகளுக்கு மாற்றப்பட்டனர். தாக்குதலின் முக்கிய இலக்கு டாக்காவாக இருந்தது.
முக்கியமாக கல்வியாளர்கள் மீது கடும் கோபம் இருந்தது ஆட்சியாளர்களுக்கு. டாக்கா பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சூறையாடப்பட்டன. அந்தப் பல்கலைக்கழகத்தில் ‘ஜகன்னாத் அரங்கம்’ என்ற ஒன்று இருந்தது. அதில் தங்கியவர்கள் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். அதைக் குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தான் ராணுவம். அங்கிருந்த சுமார் 700 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பின்னர் பாகிஸ்தான் அரசு மறுத்தது. ஆனால் ஆதாரங்களாக சில வீடியோக்கள் வெளியிடப்பட்டதும் வாயை மூடிக் கொண்டது. பொதுவாகவே கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் கணிசமாக தங்கியிருந்த இடங்கள் சூறையாடப் பட்டன.
முஜிபுர் ரஹ்மான் ஆபத்தான மனிதராக ஆட்சியாளர்களால் கருதப்பட்டார். எனவே அவர் கைது செய்யப்பட்டார். அவாமி லீக் என்ற கட்சியையே தடை செய்தார் தளபதி யாஹ்யா கான்.
மார்ச் 26, 1971 அன்று அவாமி லீக் கட்சியின் ஒரு தலைவரான எம்.ஏ.ஹன்னன் முதன்முறையாக ஓர் அறிவிப்பை வானொலியின் மூலம் செய்தார். ‘‘இனி கிழக்கு பாகிஸ்தான் புதிய நாடாகிறது. அதன் பெயர் வங்கதேசம்’. அதற்கு முன்தினம் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனது அறிவிப்பைக் கையெழுத்திட்டுப் பரப்பச் செய்தார். அதில் காணப்பட்ட வாசகங்கள் இவை. ‘‘இன்று முதல் வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு. மேற்கு பாகிஸ்தானின் ராணுவம் டாக்காவில் உள்ள காவல்துறையினர் தங்கும் இடங்களை சென்ற வியாழன் இரவன்று தாக்கியது. டாக்காவிலுள்ள ஆயும் தாங்காத அப்பாவிப் பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
“பெரும் துணிவோடு வங்காளிகள், எதிரிகளை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் சுதந்திரப் போரில் கடவுள் எங்களுக்கு உதவட்டும்’’ஆங்காங்கே பல வானொலிகளில் இந்த அறிவிப்பு ஒலிபரப்பானது. இதையெல்லாம் முழுவதுமாக தடுக்க முடியாமல் தவித்தனர் ஆட்சியாளர்கள். காரணம் உள்ளூர் மக்களின் ஆதரவு முஜிபுர் ரஹ்மானுக்கு. மேற்கு பாகிஸ்தானிடமிருந்து எந்த உதவி வேண்டுமென்றாலும் அது ஆறாயிரம் கிலோ மீட்டரை தாண்டிதான் வரவேண்டும்.
முஜிபுர் ரஹ்மானின் சார்பில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் மேஜர் ஜியா உர் ரஹ்மான். (இந்த இருவரில் முன்னவரின் மகள்தான் ஹசீனா. பின்னவரின் மனைவிதான் கலீதா. இந்த இருவரும் இன்று எதிரெதிராக இருப்பது காலத்தின் கோலம்).
‘‘வங்கதேச மக்கள் குடியரசு உதயமாகிவிட்டது. இதன் தற்காலிகத் தலைவராக நான் பொறுப்பேற்கிறேன். ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயரில், வங்காள மக்களை மேற்கு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகச் செயல்பட நான் அழைக்கிறேன். இறுதிவரை நாம் நம் தாய்நாட்டுக்காகப் போராடுவோம். அல்லாவின் அருளால் நமக்கே வெற்றி உண்டாகும்’’.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT