Published : 09 Jan 2020 09:16 PM
Last Updated : 09 Jan 2020 09:16 PM
180 உயிர்களை பலி வாங்கிய உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானத்தில் பிரச்சினை இருப்பது தெரிந்து மீண்டும் திரும்பி வர முயற்சிக்கும் போதுதான் விழுந்து நொறுங்கியது என்பது தெரியவந்துள்ளது.
இராக்கில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு சிறிது நேரத்தில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது பலத்த சந்தேகங்களைக் கிளப்பியது.
இந்த விபத்தின் பின்னணியில் எந்த ஒரு சதியும் இருப்பதற்கான உடனடி அறிகுறிகள் இல்லை. எனவே உத்தேச பிரச்சாரங்களைத் தவிர்க்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி எச்சரித்தார்.
ஈரான் சிவில் ஏவியேஷன் அமைப்பு இந்த விபத்துப் பற்றி கூறும்போது, “விமானம் தொடக்கத்தில் விமானநிலைய மண்டலத்தை விட்டுச் செல்வதற்காக மேற்கு நோக்கிச் சென்றது ஆனால் பிரச்சினை இருப்பது தெரியவரவே வலது புறம் திரும்பி மீண்டும் விமான நிலையத்திற்கு வர முயற்சித்தபோதுதான் விழுந்து நொறுங்கியது.
8000 அடி உயரத்திற்குச் சென்ற பிறகே விமானம் ராடார் திரையிலிருந்து மறைந்தது. ஆனால் விமானி வழக்கத்துக்கு விரோதமன சூழ்நிலைகள் குறித்து எந்த ஒரு ரேடியோ செய்தியையும் அனுப்பவில்லை.
சாட்சியங்களின் படி விமானத்தில் தீப்பிடித்துள்ளது, அது தீவிரமடைந்துள்ளது” என்று முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்ததாகத் தெரிவித்தது.
தரையில் இருந்தவர்கள் மற்றும் உக்ரைன் போயிங் 737 விமானத்திற்கு மேல் பறந்த இன்னொரு விமானத்தில் சென்றவர்களின் சாட்சியங்களை சேகரித்ததாக ஈரான் சிவில் ஏவியேஷன் அமைப்பு மேலும் தெரிவித்தது.
பயணிகளின் லக்கேஜ், துணிமணிகள், சாண்டா கிளாஸ் பொம்மை, ஒரு பாக்சிங் கிளவ் உள்ளிட்டவை விமான இடிபாடுகளில் உடல்களுடன் சிதறிக் கிடந்த காட்சி அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அளித்த தகவல்களின் படி 82 ஈரானியர்கள், 63 கனடியர்கள், 10 ஸ்வீடன்காரர்கள், 4 ஆப்கான் நாட்டினர், 3 ஜெர்மானியர்கள் 3 பிரித்தானியர்கள் 11 உக்ரைன் பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
ஈரான் தலைமையான அயத்துல்லா அலி காமெனி ‘உண்மையான இரங்கல்களை’ தெரிவித்ததாக கூறியுள்ளார். விமானத்தின் கருப்புப் பெட்டி தகவல்களை ஆராய நிபுணர்கள் டெஹ்ரானுக்குச் சென்றுள்ளனர்.
உக்ரைனுடன் ஒத்துழைப்போம் என்று கூறிய ஈரான் சிவில் ஏவியேஷன் தலைவர் அலி அபெட்சாதே, கருப்புப் பெட்டிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்றார்.
ஆனால் விமானங்கள் பற்றிய நிபுணர்கள் கூறுவது என்னவெனில், கருப்புப் பெட்டிகளை ஆராயும் திறமை பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெரெமனி உட்பட சிலநாடுகளில் மட்டுமே உள்ளது.
உக்ரைன் விமானம் 180 பேர்களுடன் ஷாரியார் கண்ட்ரி பகுதியின் கலாஜ் அபாத் என்ற வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது, இது விமான நிலையத்திலிருந்து 45 கிமீ தூரத்தில் உள்ளது என்று ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவில் விபத்துக்குள்ளான விமானம் விழுந்து நொறுங்கும்போதே ஏற்கெனவே தீப்பிடித்ததாகக் காட்டியுள்ளது. போயிங் 737 வ்மானம் 2016-ல் கட்டப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் அது பயணத்துக்கு உகந்ததா என்று முழுதும் பரிசோதிக்கப்பட்டது. யு.ஐ.ஏ-வின் முதல் பெரிய விபத்தாகும் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT