Published : 06 Aug 2015 10:37 AM
Last Updated : 06 Aug 2015 10:37 AM
ஹசீனா, கலீதா ஆகிய பெண்மணிகளுக்கிடையே தோன்றிய பகைமைப் பின்னணியை அறிவதற்கு முன்பாக வங்கதேசத்தின் பின்னணியைப் பார்ப்போம்.
வங்கதேச எல்லைகள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கப் பகுதியோடு இழைந்திருக்கின்றன.
பெங்கால் என்பதை நாம் வங்கம் என்று தொன்றுதொட்டுக் குறிப் பிட்டிருக்கிறோம். மகாபாரதத்தில் மன்னன் வாலியின் தத்துப் பிள்ளை களில் ஒருவனான ஹரிவம்ச வங்கன் என்பவர் வங்க சாம்ராஜ் யத்தை உருவாக்கியதாக குறிப்பு உண்டு.
பண்டைய இந்தியாவின் வங்கம் மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதி நாடாக இருந்திருக்கிறது. ஜாவா, சுமத்ரா, சயாம் ஆகிய பகுதிக ளோடு செழிப்பான வணிக உறவு கொண்டு விளங்கியது. வங்க இளவரசன் விஜயசிங்கா இலங் கையை கி.மு.544-ல் தன்வசம் கொண்டு வந்தான். இதைத் தொடர்ந்து தனது பெயரின் ஒரு பகுதியான சிங்களம் என்பதை இலங்கையின் பெயராக மாற்றி னான் என்கிறார்கள்.
பதினோறாம் நூற்றாண்டுவரை இந்தியாவின் மிகவும் வளம் நிறைந்த பகுதியாக இருந்தது பெங்கால் எனப்படும் வங்காளம். இந்திய சாம்ராஜ்யங்களின் போட்டிகள் நிறைந்த வாரிசுரிமைப் போர்கள் அங்கு நிறையவே நடந்துள்ளன. இந்து மதத்தினரும், புத்த மதத்தினரும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் களமாக அதைத் தேர்ந்தெடுத்ததுண்டு.
ஆனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் முடிவில் அங்கு ஓர் அலை வீசியது. இஸ்லாமிய அலை. துர்கிஸ்தான் பகுதியைச் சேர்ந்த முகம்மது பக்தியார் என்பவர் வங்காளத்தைத் தன் பிடிக்குள் கொண்டு வந்தார்.
சன்னி பிரிவு மதப் பிரசாரகர்கள் பின் பெருமளவில் அங்கு வந்து சேர்ந்தனர். பல மசூதிகளையும், மதரஸா எனப்படும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களையும் நிறைய எழுப்பினார்கள்.
இதன் காரணமாக இஸ்லாம் அந்தப் பகுதியில் வேர்விடத் தொடங்கியது. 1202-ம் ஆண்டில் டெல்லி பகுதியைச் சேர்ந்த ராணுவத் தளபதியான பக்தியார் கில்ஜி என்பவர் பிஹார், வங்காளம் ஆகிய இரு பகுதிகளையுமே தன் பிடிக்குள் கொண்டு வந்தார். ஆக்கிரமிப்பு என்பது அராஜகம் தான். என்றாலும் இஸ்லாமிய ஆட்சி யில் வங்காளத்தின் வணிகம் உலக அளவில் செழித்து வளர்ந்ததை குறிப்பிடத்தான் வேண்டும்.
1575-ல் நடைபெற்ற துகரோய் போரைத் தொடர்ந்து அக்பரின் முகலாயப் படைகள் வங்காளத்தைத் தங்கள் வசம் கொண்டு வந்தன. அப்போது டாக்காவை தங்கள் தலைநகரம் ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அது ஆட்சி மையத்திலிருந்து மிகவும் தொலைவாக இருந்ததால் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன.
பிரம்மபுத்ரா நதிக்குக் கிழக்காக அமைந்த பகுதி முகலாயத் தாக்கத்துக்கு உட்படவில்லை. பெங்காலி பண்பாடு அங்குவேர் விட்டிருந்தது. அதை அசைத்துப் பார்க்க முகலாய சாம்ராஜ் யத்தினால் முடியவில்லை. இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் தங்கள் தனித்துவமான பண்பாடு மற்றும் இலக்கியத்தை வளர்த்துக் கொள்ள வங்க தேசத்தினர் அனுமதிக்கப்பட்டனர்.
உலகத்தின் அத்தனை கடல் மார்க்கங்களுக்கும் வங்காளம் தன் கதவை முழுமையாகத் திறந்து விட்டது. இதனால் வணிகம் பெருகியது. கூடவே ஆபத்தும் பெருகியது.
பதினைந்தாம் நூற் றாண்டின் தொடக்கத்தில் போர்ச்சுக்கீஸியர்கள் வந்து இறங்கினார்கள். வணிகத்தைத் தாண்டியும் வங்காளத்தின்மீது ஆசை கொண்டார்கள். ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டனர்.
சிட்டகாங் மற்றும் ஹுக்ளி பகுதியில் தங்களை இவர்கள் நிலைநிறுத்திக் கொண்டார்கள். ஆனால் வங்காளத்தை ஆண்ட கசின் கான் மஷாதி என்பவர் தலைமையில் முகலாயப் படை போர்ச்சுக்கீஸியரை 1632ல் ஹுக்ளி யுத்தத்தில் தோற்கடித்து விரட்டியது.
ஒளரங்கசீப் ஆட்சியில் வங்காளத்தின் உள்ளூர் நவாப் தங்களது மூன்று கிராமங்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விற்றனர். அவற்றில் ஒன்று கொல்கத்தா. இந்தியாவில் பிரிட்டன் அழுத்தமாகக் காலடி பதித்த முதல் நகரம் கொல்கத்தாதான்.
ஜாப் சர்னோக் பிரிட்டிஷ் அரசைச் சேர்ந்த இவர் வங்காளம் தங்களது சாம்ராஜ்யத்தால் ஆளப் பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். கல்கத்தாவைத் தொடங்கி மெல்ல மெல்ல வங்காளம் முழுவதும் தாங்கள் பரவிவிட வேண்டுமென்று திட்டமிட் டார். ஒருகட்டத்தில் வங்காளத்தை ஆண்டு முகலாயர்களுடன் நேரடி கோதாவில் இறங்கினார். தொடங்கியது ஆங்கிலேய முகலாய யுத்தம்.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT