Last Updated : 27 Aug, 2015 06:26 PM

 

Published : 27 Aug 2015 06:26 PM
Last Updated : 27 Aug 2015 06:26 PM

கடல் மட்டம் உயர்வு தடுக்க முடியாதது: நாசா ஆய்வில் தகவல்

உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையாக இருக்கும் பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்து 100 அல்லது 200 ஆண்டுகளில் பூமியில் உள்ள கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடல் மட்டத்தின் உயர்வு தடுக்க முடியாதது என்றும், ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியரும், இந்த ஆய்வுக்குத் தலைவராகவும் விளங்கும் ஸ்டீவ் நெரெம் கூறும்போது, "கடலில் வெப்பம் அதிகரிப்பதாலும், பனிப் பாறைகள் உருகி கடலில் கலப்பதாலும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடியாக அல்லது அதற்கும் மேலாக உயரலாம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நிகழுமா அல்லது சிறிது காலம் கழித்து நிகழுமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது" என்றார்.

கடைசியாக 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது.

கிரீன்லாந்து பகுதியில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 303 கிகாடன் பனிப் பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன. அதேபோல அண்டார்டிக் பகுதியில் ஓர் ஆண்டுக்கு 118 கிகாடன் பனிப் பாறைகள் உருகியுள்ளன.

இதன் காரணமாக 1992ம் ஆண்டில் இருந்து உலகளாவிய கடல் மட்ட அளவு மூன்று அங்குலமாகவும் (7.6 செமீ) சில பகுதிகளில் ஒன்பது அங்குலமாகவும் (23 செமீ) உயர்ந்துள்ளது.

"உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையிலான கடல் மட்ட உயர்வு அளவுகளைப் பார்க்கும்போது, இப்போதிருக்கும் வேகத்திலேயே பனிப் பாறைகள் உருகினால், நிச்சயமாக இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளில் உலகளாவிய கடல் மட்டத்தின் அளவு 10 அடி உயரும்" என்று கடல் மட்ட உயர்வு குறித்து ஆராயும் நாசா விஞ்ஞானி டாம் வேக்னர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x