Published : 29 Dec 2019 05:15 PM
Last Updated : 29 Dec 2019 05:15 PM
எகிப்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் லாரி மீது மோதியதில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
எகிப்தில் விபத்து நடந்த ஐன் சோக்னா என்பது சூயஸ் ஆளுகை (மாகாணம்) யில் உள்ள ஒரு நகரம், இது செங்கடலின் வளைகுடா சூயஸின் மேற்கு கரையில் உள்ளது. இது சூயஸிலிருந்து தெற்கே 55 கிலோமீட்டர் தொலைவிலும், கெய்ரோவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் கிழக்கிலும் அமைந்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து இந்திய தூதரகம் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
சூயஸ் ஆளுகைப் (மாகாணம்) பகுதியில் கெய்ரோவிலிருந்து கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் இச்சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. ஐன் சோக்னா நகரத்திற்கு அருகே கடற்கரை ரிசார்ட் நகரமான ஹுர்கடாவுக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்துகள் லாரி மீது மோதின.
இதில் உயிரிழந்தவர்களில் மூன்றுபேர் இந்திய குடிமக்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்விபத்தில் 13 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் எகிப்தின் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்
உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்து ஏற்பட்ட இரண்டு பேருந்துகளிலும் 16 இந்திய சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.
இவ்வாறு எகிப்திலிருந்து இந்திய தூதரகம் ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் ஊடகங்களின்படி, உயிரிழந்தவர்களில் இரண்டு மலேசியர்களும் மூன்று எகிப்தியர்களும் அடங்குவர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT