Published : 26 Dec 2019 07:11 AM
Last Updated : 26 Dec 2019 07:11 AM
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர் இயன் சின்கிளேர். இவர் பல்வேறு நாட்டுவரலாறு, கல்வெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் கடந்த 7-ம் தேதி சிங்கப்பூர் இந்தியா பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இயன் சின்கிளேர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது சிங்கப்பூருக்கும், தமிழகத்தை ஆண்ட சோழ வம்சத்துக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த வர்த்தக, அரசியல் தொடர்பு குறித்து அவர் கருத்தரங்கில் விளக்கினார்.
இதுகுறித்து டாக்டர் இயன் சின்கிளேர் கூறும்போது, “சிங்கப்பூரில் கிடைத்த பழமையான கல் குறித்து எனக்குத் தகவல்கிடைத்தது. அதன்படி 1843-ம் ஆண்டு சிங்கப்பூர் ஆற்றின் கரையில் மிகப்பெரிய பாறைகள் இருந்தன. அப்போது படகுகள் சென்று வர வசதியாக சிங்கப்பூர் ஆற்றின் கரையில் இருந்த பாறைகளை அப்போது சிங்கப்பூரை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் உடைத்து எறிந்தது.
அப்போது ஒரு பாறையில் இருந்து ஒரு பகுதி மட்டும் கிடைத்தது. அந்த துண்டுப் பாறையில் பழங்கால கல்வெட்டு வாசகங்கள் இருந்தன. கல்வெட்டு வாசகங்கள் அடங்கிய அந்த பாறைத் துண்டு ‘சிங்கப்பூர் ஸ்டோன்' என்றே அழைக்கப்படுகிறது. அதில் இருந்த கல்வெட்டு வாசகங்களை யாராலும் சரியாக படித்து அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த கல்வெட்டு எழுத்துக்கள் ‘கவி' என்று அழைக்கப்படுகின்றன.
தற்போது அந்த வாசகங்களைக் கண்டறிந்துள்ளோம். அதில் ‘கேசரிவ’என்ற எழுத்து இருந்தது தெரியவந்துள்ளது. உடைந்த பகுதியாதலால் அதில்பாதியளவு எழுத்துகள் மட்டுமே இருந்தன. இதில் கேசரிவ என குறிப்பிடப்படுவது தமிழ்நாட்டைச் சேர்ந்த சோழ அரசர்களின் பட்டங்களாகும். பிற்காலச் சோழர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ராஜகேசரி, பரகேசரிவர்மன் என்ற பெயரை பட்டமாக சூட்டிக் கொண்டனர். எனவே இந்த கல்வெட்டானது சோழ வம்சத்துக்கும், சிங்கப்பூருக்கும் இருந்த தொடர்பைக் குறிக்கிறது என்பது புலனாகிறது. இதன்மூலம் சிங்கப்பூருக்கும், சோழ வம்சத்துக்கும் இடையே வர்த்தகத் தொடர்பு, அரசியல் தொடர்பு இருந்தது தெரியவருகிறது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சோழ வம்சத்துக்கும், சிங்கப்பூருக்கும் இடையே தொடர்பு இருந்தது தெள்ளத்தெளிவாக புலனாகிறது. இந்த கல்வெட்டானது 11-ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக இருக்கலாம்.
இதைக் கண்டறிவதில், சிங்கப்பூர் இந்தியா பாரம்பரிய மையத்தைச் சேர்ந்த கியூரேட்டர் நளினா கோபால் என்பவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கருத்தரங்கில் அவரைச் சந்தித்தேன். அப்போதுதான் 'சிங்கப்பூர் ஸ்டோன்' குறித்து அறிந்து ஆராய்ச்சி செய்தேன்” என்றார்.
இதுகுறித்து நளினா கோபால் கூறும்போது, “டாக்டர் சின்கிளேரின் ஆராய்ச்சிமுடிவுகள் ஆச்சர்யம் அளிக்கக்கூடியதாகவும், அறிவுப்பூர்வமாகவும் உள்ளன. அவருக்கு உதவியதில் மகிழ்ச்சி. எனதுதாத்தா கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்து பல குறிப்புகளை எடுத்துள்ளார். எனவே எனக்கும் கல்வெட்டு ஆராய்ச்சி மீது ஆர்வம் வந்தது” என்றார்.
நளினா கோபால் சென்னையைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த பின்னர் சிங்கப்பூருக்கு 2008-ல்குடியேறினார். தற்போது சிங்கப்பூர் இந்தியா பாரம்பரிய மையத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT