Last Updated : 22 Dec, 2019 01:52 PM

 

Published : 22 Dec 2019 01:52 PM
Last Updated : 22 Dec 2019 01:52 PM

இந்தியாவில் என்ன நடந்தாலும் எங்களையும் பாதிக்கும்; குடியுரிமைச் சட்டம், என்ஆர்சி உள்நாட்டு விவகாரம்: வங்கதேசம் கருத்து

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் : கோப்புப் படம்.

டாக்கா

இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி ஆகியவை அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். ஆனாலும், அங்கு நடக்கும் நிலையற்ற சூழல்கள் அண்டை நாடுகளையும் பாதிக்கும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு உருவாகி, மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களில் மக்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்துள்ளன. உ.பி.யில் இதுவரை 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, உ.பி. மத்தியப் பிரதேசத்தில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்தியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் டாக்கா நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக இந்தியாவில் எழுந்துள்ள அமைதியற்ற சூழல் என்பது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள். உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம், இதில் சட்டரீதியான மற்றும் பிற பிரச்சினைகள் உள்ளன என்று மீண்டும் மீண்டும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இந்தியப் பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேசுகையில், எந்தவிதமான இந்தியாவின் நடவடிக்கையும், சூழலும் வங்கதேசத்தைப் பாதிக்காது என்று உறுதியளித்துள்ளார். நாங்கள் இந்தியாவை நம்புகிறோம்

எங்களின் முதல் நண்பன் இந்தியாதான். இந்தியாவில் எந்தவிதமான அமைதியற்ற சூழல் நிலவினாலும், அது அண்டை நாடான எங்களையும் பாதிக்கும். அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரச் சுணக்கம் பல நாடுகளைப் பாதிக்கிறது. ஏனென்றால் நாம் உலக நாடுகளின் தொடர்பில் வாழ்கிறோம். ஆதலால், எங்கள் அச்சம் அனைத்தும், இந்தியாவில் அமைதியற்ற சூழல் இருந்தால், அது அண்டை நாடுகளையும் பாதிக்கும் என்பதுதான்.

இந்தியாவில் நிலைமை சீரடையும் என்று நம்புகிறோம். இந்தியாவில் நடக்கும் பிரச்சினைகள் உள்நாட்டு விவகாரம், அதை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள்''.

இவ்வாறு அப்துல் தெரிவித்தார்.

இதற்கிடையே சமீபத்தில் இந்தியாவிடம் பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சகம், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாகத் தங்கி இருந்தால், எங்கள் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவர்களை ஏற்றுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே கடந்த 12-ம் தேதி வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் இந்தியாவுக்கு வருவதாகத் திட்டமிட்டு இருந்தார். ஆனால், இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக எழுந்துள்ள கலவரம், போராட்டம் காரணமாகத் தனது பயணத்தை ரத்து செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x