Published : 30 Nov 2019 11:32 AM
Last Updated : 30 Nov 2019 11:32 AM

மைசூரைச் சேர்ந்த 25 வயது மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை: உடலை தாயகம் கொண்டுவர முடியாமல் உறவுகள் தவிப்பு

கலிஃபோர்னியா

அமெரிக்காவில் மேற்படிப்பு பயின்றுவந்த மைசூரைச் சேர்ந்த 25 வயது மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை தாயகம் கொண்டுவர இயலாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பெர்னார்டியோ எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.
மைசூருவின் சுதேஷ் சந்த், நந்தினி அய்தால் தம்பியின் மகனும் பிரபல எழுத்தாளர் கே.சிவராமன் அய்தாலின் பேரனுமான அபிஷேக் அமெரிக்காவில் கணினி அறிவியல் பயின்று வந்தார். 2016-லேயே இந்தியாவில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற அவர் மேற்படிப்பை அமெரிக்காவில்தான் கற்பேன் என மிகுந்த கனவுடன் இருந்தார்.

கனவு நனவாகி அமெரிக்காவில் 2 வருட மேற்படிப்பில் சேர்ந்த அவர் 20 மாத படிப்பை முடித்துவிட்டார். இன்னும் 4 மாதம் மட்டுமே படிப்பை முடிக்கவிருந்த நிலையில் அகால மரணமடைந்துள்ளார். படிப்பை முடித்துவிட்டு குறைந்தது 2 ஆண்டுகளாவது அங்கேயே தங்கி வேலை செய்யவும் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது படுகொலை அவரின் குடும்பத்தாருக்கு பேரிடியாக இறங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு 11.15 மணிக்கு அபிஷேக் தனது பெற்றோருடன் பேசியிருக்கிறார். அடுத்த 15 நிமிடங்களில் அவரின் மரணச் செய்தி பெற்றோருக்கு வந்துள்ளது.

சான் பெர்னார்டியோவில் ஒரு ஹோட்டலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அபிஷேக் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதனை எதிர்கொள்ள முடியாமல் அவருடைய உறவுகள் தவித்து வருகின்றன. போலீஸும் இதுவரை மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்தவில்லை.

தற்போது சான் பெர்னார்டியோவில் மிக மோசமான வானிலை நிலவுவதால் உடலைப் பெற இயலாமல் பெற்றோர் திணறி வருகின்றனர். அரசாங்கம் தலையிட்டு ஏதாவது உதவ வேண்டும் என்ற தங்களின் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x