Published : 29 Nov 2019 09:03 AM
Last Updated : 29 Nov 2019 09:03 AM
கடந்த முறை அதிபர் ட்ரம்ப் இராக்கிற்கு இப்படி ரகசிய பயணம் மேற்கொண்ட போது அமெச்சூர் பிரிட்டிஷ் விமானக் கண்காணிப்பாளர் ஒருவர் அதிபர் வழக்கமாகச் செல்லும் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமானம் இராக் நோக்கிப் பறந்ததைப் பார்த்து தகவலை வெளியிட்டதையடுத்து இந்த முறை ‘அபாயகரமான’ ஆப்கானிஸ்தானுகுத் தான் பயணம் மேற்கொள்ளவிருப்பதை அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டு ரகசியமாக வைத்திருந்தார்.
ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அதிபருடன் பயணிப்போரின் செல்போன்கள் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற சாதனங்கள் முடக்கி வைக்கப்பட்டன. அமெரிக்க படைகளுக்கு நன்றி நவிலல் குறித்த அதிபரின் ட்வீட்களும் அவர் பயணம் செய்த பிறகு வெளியிடப்படுமாறு ரகசியம் காப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
புதன்கிழமையன்று ஒரு குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் குழு மட்டும் ரகசியமாக அழைக்கப்பட்டனர். பிறகு கருப்பு வேனில் இவர்கள் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே அதிபர் ட்ரம்ப் புளோரிடாவிலிருந்து வந்தார், செய்தியாளர்களிடம் ட்ரம்ப் மார்-அ-லாகோ கிளப்பில் நன்றி நவிலல் நிகழ்ச்சியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
புளோரிடாவிற்கு ட்ரம்ப் சென்ற விமானத்தின் தோற்றம் மாற்றப்பட்டு வெஸ்ட் பாம் கடற்கரை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. எனவே அதிபர் ஆப்கானுக்குச் செல்வது தெரியாமல் மறைக்கப்பட்டது.
இதே போன்ற தோற்றமுடைய இன்னொரு விமானத்தில் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் சிலருடன் புறப்பட்டது. லேண்டிங்கின் போதும் கேபின் விளக்குகள் மங்கலாக்கப்பட்டு ஜன்னல்களும் மூடப்பட்டன.
இந்த ரகசிய ஆப்கான் பயணம் சில வாரங்களில் திட்டமிடப்பட்டது என்று வெள்ளை மாளிகை பிரஸ் செயலாளர் ஸ்டெபானி கிரிஷாம் கூறினார்.
“ஆப்கானிஸ்தான் ஒரு அபாயகரமான பகுதி, அதிபர் அமெரிக்கப் படைகளுக்கு நேரில் நன்றி தெரிவிக்க முடிவெடுத்தார். படையினர் தங்கள் குடும்பத்தினைப் பிரிந்திருக்கின்றனர், அவர்களுக்கு ட்ரம்ப் வருகை ஒரு சந்தோஷ அதிர்ச்சியாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT