Published : 25 Nov 2019 11:54 AM
Last Updated : 25 Nov 2019 11:54 AM
உடல்நிலை மோசமான நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு தீவிர சிகிச்சை தேவை என்று பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும் விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்கா கைது செய்ய தீவிரம் காட்டியது. இதற்கிடையே அவர் மீது ஸ்வீடன் அரசு பாலியல் வழக்கு சுமத்தியது. இதனால் நாடு கடத்தும் சூழ்நிலைக்கு ஆளான நிலையில் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் சிறையில் 2012-ல் பதுங்கினார்.
9 ஆண்டுகள் ஈக்வடார் தூதரகத்திலேயே தஞ்சம் அடைந்திருந்த அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை திடீரென ஈக்வடார் அரசு வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரலில் அவர் லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு ஜாமீன் மீறிய குற்றச்சாட்டில் 50 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒப்படைப்பு விசாரணைக்கு முன்னதாக அசாஞ்சே லண்டனின் புறநகரில் உள்ள பெல்மர்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனிமைச் சிறையில் தள்ளப்பட்டதால் சில மாதங்களுக்கு முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
அசாஞ்சேவைப் பரிசோதித்த 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று (திங்கள்) பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஒரு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில், ''அசாஞ்சே மனச்சோர்வு மற்றும் பல் பிரச்சினைகள் மற்றும் கடுமையான தோள்பட்டை நோய் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக ஒரு பல்கலைக்கழக மருத்துவமனையில் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
இக்கடிதம் பிரிட்டிஷ் அரசின் உள்துறைச் செயலாளர் ப்ரீதி பட்டேலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டாக்டர் லிசா ஜான்சன், ''சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள அசாஞ்சே மருத்துவரீதியாகத் தகுதியானவரா என்பதை தீர்மானிக்க ஒரு சுயாதீனமான மருத்துவ மதிப்பீடு தேவை'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT