Published : 02 Aug 2015 12:48 PM
Last Updated : 02 Aug 2015 12:48 PM
சுற்றுசூழல் மாசடவைதற்கும் வானிலை மாற்றத்துக்கும் பெரும் காரணமாக அமையும் கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பிற்கான முக்கிய அறிவிப்பை திங்களன்று அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொள்கிறார்.
தூய மின்சார உற்பத்தித் திட்டத்தின் இறுதி வடிவத்தை வெள்ளை மாளிகை வெளியிடவுள்ளது. அமெரிக்காவில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்துக்கு உச்ச வரம்பை நிர்ணயித்து வெளியேற்றத்தை பெருமளவு கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்தகைய நடவடிக்கை முதல் முறையாக நடைபெறவுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் வீடியோ ஒன்றில் கூறிய போது, “வானிலை மாற்றம் என்பது, பொருளாதாரம், ஆரோக்கியம், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும். வானிலை மாற்றம் என்பது அடுத்த தலைமுறையினருக்கு பிரச்சினையாக ஒரு போதும் இருக்கக் கூடாது.
வானிலை மாற்றத்துக்கு நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களே பெரிய அளவில் தீய பங்களிப்பை செய்து வருகிறது, ஆனால் இன்று வரை காற்றில் கரியமிலவாயுவை அபாயகரமாக சேமிக்கப் பங்களிப்புச் செய்யும் மின் உற்பத்தித் திட்டங்களின் மீது வரம்பை அரசுகள் மேற்கொள்ளவில்லை.
நமது குழந்தைகளுக்காக, அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காக இப்போது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன” என்றார்.
அமெரிக்க கார்பன் வெளியேற்றத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் மட்டும் 40% பங்களிப்பு செய்து வருகிறது. எனவே அமெரிக்காவும் பிற நாடுகளும் பூமியைக் காப்பாற்ற இப்போதே செயல்படுவது அவசியம் என்கிறார் ஒபாமா. பாரீஸில் உலக நாடுகள் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வரும் டிசம்பர் மாதம் சந்திக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் 30% குறைக்கப்பட வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
இந்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக அரசு மீது வழக்கு தொடர்வோம் என்று எதிர்கட்சிகள் இப்போதே கங்கணம் கட்டியுள்ளன,.
மேலும் மாகாணங்கள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தைக் கைகொள்ள ஊக்கமளிக்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT