Published : 06 Aug 2015 06:11 PM
Last Updated : 06 Aug 2015 06:11 PM
லிபியாவிலிருந்து சுமார் 700 குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 400 பேர் மீட்கப்பட்ட நிலையில் 25 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர் மற்றும் மோசமான வாழ்வாதார நிலைக் காரணமாக அங்கிருக்கும் மக்கள் ஐரோப்பாவுக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் லிபியாவிலிருந்து அளவுக்கு அதிகமான குடியேறிகளை ஏற்றி பயணம் மேற்கொண்ட மீன்பிடி கப்பல் புதன்கிழமை மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
லிபிய கடற்பகுதியிலிருந்து சுமார் 30 மைல் தூரம் படகு மூழ்கியதை கண்ட இத்தாலிய கடற்படையினர் மீட்புப் பணியை தொடங்கினர்.
தற்போதைய நிலைவரை 25 உடல்கள் மீட்கப்பட்டன. ஐ.நா. அதிகாரிகளும் இத்தாலிய கடற்படை அதிகாரிகளும் இணைந்து 400 பேரை பத்திரமாக மீட்டனர். மத்திய தரைக்கடலின் வானிலை நிலவரத்தால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
அளவுக்கு அதிமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடலில் காணமால் போன நூற்றுக்கணக்கானோரை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.
மத்திய தரைக்கடலில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இதேபோல 2 படகுகள் விபத்துக்குள்ளானதில், மொத்தம் 450 பேர் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT