Published : 13 Aug 2015 10:54 AM
Last Updated : 13 Aug 2015 10:54 AM
புவியியல் அமைப்பு ரீதியாக மேற்கு பாகிஸ்தானுக்கும், கிழக்கு பாகிஸ்தானுக்கும் நடுவே தூரம் மிக அதிகம் - சுமார் ஆயிரம் மைல்கள்!
இரு பகுதி மக்களும் மனதளவில் மேலும் அதிகமாகப் பிரிந்திருந்தனர். இந்த இடைவெளிக்கு பல முக்கிய காரணங்கள்.
அரசாட்சி, பொருளாதாரம், ராணுவம் எல்லாமே மேற்கு பாகிஸ்தானின் வசம்தான் இருந்தன. நாட்டின் மொத்த பட்ஜெட்டில் நாலில் ஒரு பங்கு மட்டுமே கிழக்கு பாகிஸ்தானுக்காகச் செலவழிக்கப்பட்டது. நவம்பர் 1970ல் புயல் ஒன்று வங்கதேசத்தை கோபாவேசமாகத் தாக்கியது.
‘போலா’ என்ற பெயரைச் சொன்னாலே வங்கதேச மக்கள் அலறுவார்கள். 1970 நவம்பர் 1 அன்று அந்தப் பகுதியை (அப்போது அது கிழக்கு பாகிஸ்தான்) புரட்டிப் போட்ட புயலின் பெயர் அது. இந்தப் புயலின் காரணமாக கடல் அலைகள் 30 அடி உயரத்துக்கு எழும்பின. குறைந்தது மூன்று லட்சம்பேர் இறந்தார்கள். புயல் சரித்திரத்திலேயே மிக அதிகமானவர்களை காவு வாங்கியது இதுதான் என்கிறார்கள். தஜுமுதீன் என்ற நகரத்தில் இருந்தவர்களில் பாதிப்பேர் இதில் இறந்துவிட்டனர். இந்த அளவுக்கு இல்லை என்றாலும் பல்வேறு புயல்களால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் பகுதியாகத்தான் வங்கதேசம் உள்ளது. 1876-ல் வீசிய புயல்கள் சுமார் 5000 பேரை பலி கொண்டது. 1991ல் வீசிய கோர்க்கி புயல் சுமார் ஒன்றரை லட்சம் பேரை மேல் உலகத்துக்கு அனுப்பியது.
போலா புயலைத் தொடர்ந்து மேற்கு பாகிஸ்தானிலிருந்து நிவாரண உதவிகள் மிக மெதுவாகவே வரத் தொடங்கின. கோபத்தின் உச்சிக்குச் சென்றனர் கிழக்கு பாகிஸ்தான் மக்கள்.
போதாக்குறைக்கு பாகிஸ்தானின் தேசிய மொழி உருது மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தானில் பெருமளவு இருந்த வங்காளிகள் தங்கள் கலாச்சார முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ளத் தீர்மானித்தனர். உருதுவுடன் வங்காள மொழியும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினர். இதெல்லாம் தங்களுக்குச் சுயாட்சி கிடைத்தால்தான் சாத்தியம் என்றனர். அவாமி லீக் என்ற கட்சி உருவாகியது.
இந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த புட்டோ தனது பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சி என்பதை 1967ல் தொடங்கினார். கொஞ்சம் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட இந்தக் கட்சி அயூப் கானின் ஆட்சியில் எதிர்கட்சியாகப் பணியாற்றியது.
அயுப் கானுக்கு எதிராகப் பலவித குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மட்டுமே அவரது ராஜினாமாவைக் கோரியிருந்தால் அதைப்பற்றி அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால் அந்த நாட்டின் ராணுவம் அவர் பதவி விலகலை எதிர்பார்க்கத் தொடங்கியது. வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியான யாஹ்யா கானுக்கு தன் பதவியை விட்டுக் கொடுத்தார்.
அதிபரான கையோடு யாஹ்யா கான் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். அதுவரை ஒன்றாகவே கருதப்பட்ட மேற்கு பாகிஸ்தானை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை பஞ்சாப், பலோசிஸ்தான், சிந்து மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவை. மக்கள் தொகைக்குக் தகுந்த மாதிரிதான் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென்று அவர் சட்டம் இயற்றினார். இதன் விளைவை அவர் அப்போது முழுமை யாக உணர்ந்தாரா என்பது தெரியவில்லை.
மக்கள் தொகை கிழக்கு பாகிஸ்தானில்தான் அதிகமாக இருந்தது. எனவே தேசிய நாடாளுமன்றத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்குத்தான் அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள் என்ற நிலை உண்டானது.
1970ல் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. கணிசமான அளவில் ஒழுங்காகவே நடைபெற்ற தேர்தல் என்கிறார்கள் உலகப் பார்வையாளர்கள்.
அதற்கு ஒரு மாதத்திற்கு முன் வீசிய போலா புயலும் அந்த விஷயத்தில் மேற்கு பாகிஸ்தான் காட்டிய அலட்சியமும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை கொந்தளிக்க வைத்திருந்தது.
தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் போட்டி யிட்டாலும் அவர்களில் உண்மையான போட்டி என்பது மேற்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், கிழக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட அவாமி லீக் கட்சிக்கும்தான்.
இருகட்சிகளின் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது. முடிவு என்னவாக இருக்கும் என்பதில் சுவாரசியம் அதிகமானது. எப்படியும் இருக்கலாம் என்பதே பலவித யூகங்களுக்கு வழிவகுத்தது.
கிழக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய அளவில் அவாமி லீக்குக்கு ஆதரவான தேர்தல் முடிவை அளித்தது. கிழக்கு பாகிஸ்தானில்தான் தொகுதிகள் அதிகம் என்பதால் மொத்த பாகிஸ்தானை எடுத்துக் கொண்டாலும் அவாமி லீக்குதான் அதிக தொகுதிகளில் வெற்றி என்று ஆனது.
இந்தத் தேர்தலில் இன்னொரு மிகத் தெளிவான போக்கும் வெளியானது. அவாமி லீக் மேற்கு பாகிஸ்தானிலும் போட்டியிட்டது. பாகிஸ்தான் மக்கள் கட்சி கிழக்கு பாகிஸ்தானிலும் போட்டியிட்டது. ஆனால் அவாமி லீகால் மேற்கு பாகிஸ்தானில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. அதேபோல் பாகிஸ்தான் மக்கள் கட்சியால் கிழக்கு பாகிஸ்தானில் ஒரு வெற்றியைக்கூட பெறமுடியவில்லை.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT