Published : 03 Nov 2019 10:59 AM
Last Updated : 03 Nov 2019 10:59 AM

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம்: தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பாங்காக்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய காட்சி :படம் ஏஎன்ஐ

பாங்காக்

இந்தியாவில் வழக்கமான, அதிகாரிகள் மட்டத்திலான நிர்வாக முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன, முதலீட்டாளர்களுக்கான புதிய உருமாற்றங்களை நோக்கி பயணித்து வருகிறது, இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்று தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் இன்று (நவம்பர் 3) நடைபெற உள்ளது. 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாகத் தாய்லாந்து சென்றுள்ளார்.

பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று உரையாற்றினார். அப்போது குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள், தாய்லாந்திலேயே நிரந்தரமாகக் குடியேறிய இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி பாங்காக்கில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, தாய்லாந்து நாட்டில் உள்ள ஏராளமான முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், உலக முதலீட்டாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றார்கள்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் வழக்கமான நிர்வாக முறை, அதிகாரிகள் நடத்தும் நிர்வாக முறை அனைத்தும் நிறுத்தப்பட்டு, தற்போது முதலீட்டாளர்களுக்கு ஏற்ற உருமாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகிறோம். உலகளவில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது.

இந்தியாவில் கடினமாக உழைத்து அரசுக்கு வரிசெலுத்தும் வரிசெலுத்துவோர் மதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக வரிவிதிப்பு துறையில் என்னுடைய அரசு பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மக்களுக்கு ஏற்ற வரிசெலுத்தும் நிர்வாக முறை இந்தியாவில் இருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதை மேலும் மக்களுக்கு ஏற்றவாறு மாற்றத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுதான் சரியான நேரம். அன்னிய நேரடி முதலீடு, எளிதாகத் தொழில் செய்தல், எளிதாக வாழ்தல் தரம் உயர்ந்திருக்கிறது, உற்பத்தி உயர்ந்து வருகிறது. அரசுப் பணிகளில் காலதாமதம்,ஊழல் ஒழிப்பு,அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து முதலீட்டாளர்கள் ஊழல் செய்தல் போன்றவை குறைந்து வருகிறது.

உலகளவில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குச் சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 28600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு கடந்த 20 ஆண்டுகளில்தான் கிடைத்துள்ளது

5 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதுதான் எங்கள் கனவாக இருக்கிறது.கடந்த 2014-ம் ஆண்டு என்னுடைய அரசு ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 2 லட்சம் கோடி டாலர், கடந்த 65 ஆண்டுகளிலும் 2 லட்சம் கோடி டாலர்தான். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி டாலர்களை எட்டியிருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகள் செய்திருக்கிறோம். மக்களுக்கு நேரடி உதவிகளை அளிக்க நேரடி வங்கிப்பரிமாற்ற முறையால் இடைத்தரகர்களும், திறமையின்மையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்காகச் செலவு செய்யப்பட்ட பணம் ஏழைகளுக்குச் சென்ற சேரவில்லை என்ற செய்தியைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். ஆனால், என்னுடைய அரசு வந்தபின் இந்த கலாச்சாரத்தை நிறுத்தி, மக்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் மானிய உதவி கிடைக்கிறது.

உலகளவில் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீடு செய்யும் நாடாக இந்தியா இருந்துவருவதால், தாய்லாந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அழைக்கிறேன். சிறந்த சுற்றுலாத் தளங்கள், விருந்தினர் உபசரிப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. இந்தியா வளர்ச்சியும், பூரிப்பும் அடையும் போது, உலகமும் வளர்ச்சி அடையும். இரு கரங்களைத் திறந்துவைத்து உங்களை இந்தியா அழைக்கிறது

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x