Published : 04 Oct 2019 07:48 AM
Last Updated : 04 Oct 2019 07:48 AM

டொனால்டு ட்ரம்பும் பதவிநீக்க நடவடிக்கையும்..

ஜனநாயக கட்சியினரின் கோரிக் கையை ஏற்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அந்நாட்டு நாடாளுமன்ற சபா நாயகர் நான்சி பெலோசி அறிவித் துள்ளார். உக்ரைன் நாட்டின் புதிய அதிபருடன் ட்ரம்ப் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப் போது, அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் மகன் ஹன்டர் பிடனுக்கும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெட்ரோலிய நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பை மீண்டும் விசாரிக்குமாறு ட்ரம்ப் அவரிடம் கேட்டுக்கொண்டதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.

2020-ல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு கடும் போட்டியாளராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப் படுவதால் பிடனின் பெயரைக் கெடுக்க ட்ரம்ப் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக ஜனநாயகக் கட்சி யினர் குற்றம்சாட்டுகின்றனர்.

உக்ரைன் அதிபருடன் ட்ரம்ப் பேசிய விவகாரம், வெள்ளை மாளி கையில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) அதிகாரி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. உக்ரைனுக்கு வழங்க வேண்டிய 400 மில்லியன் டாலர் ராணுவ உதவியை நிறுத்தி வைத்த விவ காரத்துடன் ஹன்டர் பிடன் தொடர் பான விசாரணையை ட்ரம்ப் தொடர்புபடுத்தாமல் இருந்திருந் தால் இந்த உண்மை வெளியில் வந்திருக்காது.

உக்ரைன் அதிபருடனான தொலைபேசி உரையாடலில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், இந்த விவகாரத்தை கசிய விட்டவர் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர் என்றும் ட்ரம்ப் தெரிவித் துள்ளார். இந்த விவகாரத்தை திசை திருப்ப வெள்ளை மாளிகை ஊழி யர்கள் எவ்வளவோ முயற்சி செய் தனர். ஆனால் 2 தலைவர்களுக்கு இடையிலான உரையாடலின் முழுமை பெறாத அறிக்கை வெளியாகி உள்ளது. இது ட்ரம்ப் மற்றும் அவ ருக்கு நெருக்கமானவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

2016 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹில்லாரி கிளின்டனை தோற்கடிக்க ரஷ்யா தலையிட்டதாக எழுந்த புகார் அமெரிக்காவை அதிரவைத்தது. இப்போது, எழுந்துள்ள உக்ரைன் அதிபருடனான தொலைபேசி உரையாடல் விவகாரமும் அவ் வளவு சீக்கிரம் மறைந்துவிட வாய்ப்பு இல்லை.

ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக பதவி வகித்தபோது ஜோ பிடன், தனது மகன் ஹன்டர் பிடனுக் கும் இயற்கை எரிவாயு நிறுவனத் துக்கும் இடையிலான உறவு குறித்த விசாரணையை ரத்து செய்வதுடன் விசாரணை அதிகாரியை பணி நீக்கம் செய்யாவிட்டால் 1 பில்லி யன் டாலர் உதவியை வழங்க முடி யாது என உக்ரைன் அதிகாரி களுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த மிரட்டலுக்கு அரசு அடி பணிந்ததையடுத்து, நிதியுத வியை அமெரிக்கா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பிடன் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சியினர் ட்ரம்புக்கு சிக்கல் ஏற்படுத்த முயன்றால், ட்ரம்பும் பிடனுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவார்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் போது மான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், அதிபரை பதவிநீக்கம் செய்யும் முயற்சி விபரீத விளை யாட்டு என்பதை ஜனநாயகக் கட்சி யினர் உணர்ந்திருப்பார்கள். 1998-ல் அதிபராக இருந்த பில் கிளின்ட னுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவிநீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

இப்போதைய சூழ்நிலையில், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக் கலாம். ஆனால் அவர்கள் அதி பருக்கு எதிராக வாக்களிக்க தயங் கலாம். இதுபோல, செனட் சபையில் குடியரசு கட்சியின் 20 உறுப்பினர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்தால்தான் இந்தத் தீர்மானம் நிறைவேறும். இது நடக்காத காரியம்.

எனவே, ஜனநாயகக் கட்சி யினர், ட்ரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்து 2020 அதிபர் தேர்தலில் வீழ்ச்சிக்கான விதையை அவர் களே விதைத்துள்ளார்களோ என்ற கேள்வி எழுகிறது. முதலில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை ஆதாரத் துடன் நிரூபிக்க வேண்டும். இரண்டா வதாக, ஜனநாயக கட்சியினர் பதவி நீக்க நடைமுறைக்கு சரியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜனநாயக கட்சியினர் மிகவும் முக்கியமான பிரச்சினையை எழுப்பி உள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து போரிடு வதற்கு தேவையான சக்தி அவர் களுக்கு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x