Published : 03 Oct 2019 09:25 PM
Last Updated : 03 Oct 2019 09:25 PM
வாஷிங்டன், ஐ.ஏ.என்.எஸ்.
அமெரிக்காவில் தொழில்நுட்ப வர்த்தகத்தில் தொழிலதிபரான செல்வந்தர் துஷார் ஆத்ரே 4 நாட்களுக்கு முன்பாக கடத்தப்பட்டார், ஆனால் அவர் தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பாகியுள்ளது.
கலிபோர்னியாவின் சாந்தாகுரூஸிலிருந்து 50 வயதான துஷார் ஆத்ரே கடத்தப்பட்ட நிலையில் அவர் தனது பிஎம்டபிள்யூ காரில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்ரேநெட் நிறுவனத்தின் உரிமையாளரான துஷார் ஆத்ரே, சிலிகான்வாலி கார்ப்பரேட் வர்த்தகத்தில் முக்கியமான நபர் ஆவார். இவர் கடைசியாக தன் வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரில் சென்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சாந்தாகுரூஸ் மலைப்பகுதியில் பி.எம்.டபிள்யூ கார் இருந்ததையடுத்து அதில் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் வர அது துஷார் ஆத்ரே என்று தெரியவந்தது.
கொள்ளைச் சம்பவம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் இருவர் மீது சந்தேகம் கொண்டு தேடி வருவதாகத் தெரிகிறது.
கடத்தப்படும் போது ஆத்ரே வீட்டில் மேலும் சிலருடன் இருந்ததாக போலீஸ் தரப்பினர் கூறுகின்றனர்.
இவர் ஓராண்டுக்கும் முன்பாக மரிஜுவானா தயாரிப்புத் தொழிலில் இறங்கியுள்ளார். மரிஜுவானா, கஞ்சா வர்த்தகத்தில் கறுப்புச் சந்தை குண்டர்களின் ஆதிக்கம் அதிகம், இதில் ஏதாவது பிசகு நடந்தால் உயிர் போய்விடும் என்று ஆத்ரேவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் மீடியாவிடம் தெரிவித்துள்ளார்.
ஆகவே அனைத்துத் தரப்புகளிலிருந்தும் இந்த விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தரப்பு கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT