Published : 03 Oct 2019 10:26 AM
Last Updated : 03 Oct 2019 10:26 AM

70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு: ஹைதராபாத் நிஜாம் வழக்கில் பாகிஸ்தான் வாதத்தை லண்டன் நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி

ஹைதராபாத் நிஜாமின் ரூ.306 கோடி (3.5 கோடி பவுண்ட்) பணத்தைக் கேட்டு உரிமை கொண்டாடிய பாகிஸ்தானின் கோரிக்கையை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்து, இந்தியாவுக்கும், நிஜாமின் வாரிசுகளுக்கும் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.

ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 1948-ம் ஆண்டு 10 லட்சம் பவுண்டாக இருந்த தொகை, 70 ஆண்டுகளில் 3.5 கோடி பவுண்ட்களாக (ரூ.306 கோடி) உயர்ந்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பின் கடந்த 1948-ம் ஆண்டு ஹைதராபாத் 7-ம் நிஜாம் பாகிஸ்தானுடனும், இந்தியாவுடன் சேர்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தார். இதனால், தன்னிடம் இருந்த 10 லட்சம் பவுண்ட்களை இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராஹிம் ரஹ்மத்துல்லாவிடம் பத்திரமாக இருக்குமாறு வைத்திருந்தார்.

இந்தப் பணத்தை அப்போது ஹைதராபாத் நிஜாம் அரசில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங் இங்கிலாந்தில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் கடந்த 1948-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி டெபாசிட் செய்தார்.

ஆனால், இந்தப் பணம் தனது கவனத்துக்கு வராமல், ஒப்புதலின்றி டெபாசிட் செய்யப்பட்டதாக ஹைதராபாத் 7-வது நிஜாம் ஒஸ்மா அலிகான் குற்றம் சாட்டினார். இதனால் இந்தப் பணம் நாட்வெஸ்ட் வங்கியில் முடக்கிவைக்கப்பட்டது. இந்தப் பணத்துக்கு உரிமை கோரி ஒஸ்மா அலிகானின் பேரன்கள் முகாராம் ஜா, முபாகாம் ஜா, இந்திய அரசு சார்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தங்களின் வெளியுறவுத்துறை அமைச்சருக்குத்தான் டெபாசிட் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தப் பணத்துக்கு வாரிசுகளாக 7-வது நிஜாம் ஒஸ்மா அலிகான் தனது பேரன்கள் முகாராம் ஜா, முபாகாம் ஜா இருவரையும் நியமித்து, கூடுதலாக இந்திய அரசுக்கும் உரிமை உள்ளது என கடந்த 1965-ம் ஆண்டு அறிவித்தார். இதன்படி வழக்கை இந்திய அரசும், நிஜாமின் பேரன்களும் நடத்தி வந்தனர்.

சர்வதேசச் சட்டங்களை மீறி இந்தியா சொத்துகளை அபரிக்க முயல்கிறது, இந்தியாவின் படையெடுப்பில் மக்களைக் காக்கவே அப்போது இருந்த 7-வது நிஜாம் பணத்தை தங்களிடம் கொடுத்து வைத்திருந்தார். இப்போது அவர் இல்லாததால் அது எங்களுக்குத்தான் சொந்தம் என்று பாகிஸ்தான் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

ஆனால் இந்தியா தரப்பிலும், நிஜாமின் வாரிசுகள் தரப்பிலும், " நிஜாமின் ஒப்புதலின்றி அப்போதைய நிதியமைச்சர் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றபின் அரசின் அனுமதியின்றி டெபாசிட் செய்யப்பட்ட பணம்'' என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் கடந்த ஜூன் மாதம் முடிந்த நிலையில் 140 பக்கங்களில் லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீதிபதி மார்கஸ் ஸ்மித் வழங்கிய தீர்ப்பில், "ஹைதராபாத் நிஜாம் ஆயுதங்கள் வாங்கியதற்குப் பதிலாக பணம் அளித்தார் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பிய பணம் என்றால் தூதரகத்தின் கணக்கில் அனுப்பப்படாமல் அப்போது இருந்த தூதர் ரஹமத்துல்லா கணக்கில் முறைகேடாக செலுத்தப்பட்டுள்ளது. இது சட்டத்துக்குப் புறம்பானது. ஆதலால், பணத்தை தங்களுடையது என்று பாகிஸ்தான் கோருவதற்கு ஆதாரங்கள் இல்லை.

இந்தப் பணத்துக்கு 7-வது நிஜாமின் பேரன்களான முகாராம் ஜா, முபாகாம் ஜாவும், இந்திய அரசு ஆகியோர் மட்டுமே உரிமையாளர்களாகக் கருத முடியும். பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரிக்கிறோம்" என தீர்ப்பு வழங்கினார்.

ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கில் இப்போது இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சர்வதேச நீதிமன்றத்தில் குல்புஷன் வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு நடக்கும் போது 7-வது நிஜாமின் பேரன்கள் முபாகாம் ஜா, முகாராம் ஜா ஆகியோர் சிறுவயதுப் பிள்ளைகளாக இருந்த நிலையில் அவர்களுக்குத் தற்போது 70 வயதுக்கு மேலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x