Published : 01 Oct 2019 11:38 AM
Last Updated : 01 Oct 2019 11:38 AM
வாஷிங்டன்
யார் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது. மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரமதர் மோடியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தார். ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்தக் கூட்டம் முடிந்த பின் திங்கள்கிழமை இரவு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தாயகம் திரும்பினார்.
ஐ.நா.சபையில் கடந்த ஒரு வாரத்தில் பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஏராளமான உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் காஷ்மீர் விவகாரம் குறித்தும், அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறியதும் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெய்சங்கர் பதில் அளித்துப் பேசியதாவது:
"கடந்த 40 ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானதுதான். எந்த மூன்றாவது நாட்டையும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அனுமதிக்கமாட்டோம். ஆலோசனை, பேச்சுவார்த்தை என எதுவாக இருந்தாலும் அது இருநாடுகளுக்கு இடையிலாகத்தான் இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை ஒருவிஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய கருத்து எளிமையானது. வெளியுறவுத்துறை என்னுடைய துறை, என்னிடம்தான் மத்தியஸ்தத்தைப் பற்றிப் பேச வேண்டும்.
என்னுடைய துறையின் விவகாரத்தை நான் கையாளும்போது மற்றவர்கள் தலையீட்டை அனுமதிப்பதா இல்லையா என்பதை நான் முடிவு செய்வேன். யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், மத்தியஸ்தம் செய்வதாகத் தெரிவிக்கலாம். ஆனால், இந்த விவகாரத்துக்கு உகந்ததா, நடப்பதற்குச் சாத்தியமானதா என்பதை நான்தான் முடிவு செய்வேன். சிலர் எப்போது வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம், நானும் தெளிவாக இருக்கிறேன். இந்தியாவும் அதில் தெளிவாக இருக்கிறது. மூன்றாவது தலையீட்டை ஏற்கமாட்டோம்.
ஐ.நா.வில் நடந்த பல்வேறு கூட்டங்களிலும் ஜம்மு காஷ்மீரில் நடந்த விஷயங்கள் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டது. காஷ்மீரில் இருந்த அரசியலமைப்பின் 370-வது பிரிவு குறித்தும், காஷ்மீரில் என்ன நடந்தது, எதற்காக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தோம் என்பது குறித்தும் உலகத் தலைவர்களிடம் தெரிவித்தோம்".
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்
ரஷ்யாவிடம் எஸ்-400 ராக்கெட் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து நிருபர்கள் கேட்டபோது அதற்கு ஜெய்சங்கர் அளித்த பதலில், "நாம் என்ன ஆயுதங்கள் வாங்க வேண்டும், யாரிடம் வாங்க வேண்டும் என்பது நம்முடைய இறையாண்மைக்கு உட்பட்டது. இதை நாம் தொடர்ந்து பராமரித்து வருகிறோம். ஆனால், ஒரு நாடு நம்மிடம் வந்து எங்கிருந்து ஆயுதம் வாங்க வேண்டும், ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கக்கூடாது, என்ன மாதிரியான ஆயுதம் வாங்க வேண்டும் என்று கூறுவதை இந்தியா ஏற்காது. வாய்ப்புகளை சுதந்திரமாகத் தேர்வு செய்வது நம்மிடம்தான் இருக்கிறது. ஒவ்வொருவரின் நலனையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT