Published : 27 Sep 2019 04:25 PM
Last Updated : 27 Sep 2019 04:25 PM
வாஷிங்டன்
2020-ம் ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் உக்ரைன் நாட்டை தலையிட வைப்பதற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்ட திட்டத்தை ஒரு அதிகாரி வெளிப்படுத்தி ட்ரம்ப் அரசை ஆட்டம் காண வைத்துள்ளது வெளியாகியுள்ளது. அந்த அதிகாரி குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அந்த அதிகாரி அளித்த புகார் விவரம் நேற்று அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் சபையின் நிரந்தர தேர்வுக்குழு முன் வெளியிடப்பட்டது.
இதில் தனது அரசியல் எதிரியும், முன்னாள் துணை அதிபரும், 2020ம்ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கும் ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடாத வகையில் செய்வதற்கு அதிபர் ட்ரம்ப் செய்த திட்டங்களை அந்த whistleblower வெளியிட்டுள்ளார்.
இந்த பரபரப்பான புகார் மூலம் அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்றாலும், இன்னும் 14 மாதங்களில் நடைபெறவிருக்கும் அடுத்த அதிபர் தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறிவிட்டதாக நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் மீது கூறப்படும் குற்றச்சாட்டு என்ன?
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹன்டர் ஆகியோர் உக்ரைன் நாட்டில் பல்வேறு தொழில்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த தொழிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரணை நடத்துமாறு, அந்த நாட்டு அதிபர் விளாதிமிர் ஸெலென்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்காக உக்ரைனுக்கு அளித்து வந்த உதவித் தொகையை அவர் நிறுத்தி வைத்தார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இது, அமெரிக்க அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தனது அரசியல் எதிரியும், எதிர்கால ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக வரப்போகும் ஜோ பைடனை ஓரம் கட்டுவதற்காக, தனது பதவியை அதிபர் ட்ரம்ப் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
இதற்காக மற்றொரு நாட்டுடன் சேர்ந்து ரகசியமான பேரத்தில் ஈடுபட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப் என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டி டிரம்புக்கு எதிராக தகுதி நீக்க விசாரணையைத் தொடங்கி உள்ளார்கள்.
புகாரில் கூறப்பட்டது என்ன?
அதிபர் ட்ரம்பின் அரசியல் வாழ்க்கையை அசைத்துப் பார்க்கும் இந்த புகார் அமெரிக்காவுக்கும் மட்டுமல்ல, உக்ரைன் நாட்டுக்கும் பெரும் தலைவலியை எதிர்காலத்தில் உருவாக்கும். அதிபர் ட்ரம்ப் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக செய்யும் திட்டங்கள் குறித்த இந்த ரகசியங்களை ஒரு அதிகாரிதான் மின்அஞ்சல் மூலம் வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் 12-ம் தேதி எழுதப்பட்ட இந்த புகார் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த புகாரில், " என்னுடைய அதிகாரபூர்வ கடமை என்பதால் இதைச் சொல்கிறேன். ஒன்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவலின்படி அமெரிக்க அதிபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டின் உதவியின் மூலம் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முயல்கிறார்
இந்த தலையீடு என்பது, அதிபரின் அரசியல் எதிரியாக இருக்கும் ஜனநாயகக் கட்சியின் முக்கியமானவரை விசாரணைக்கு உள்ளாக்கி, அந்த வெளிநாட்டு அரசுக்கு அதிபர் ட்ரம்ப் அழுத்தமும், நெருக்கடியும் கொடுத்து வருகிறார்" எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை நார்த் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கரோலினா செனட்டர் ரிச்சர்ட் பார் என்பவருக்கும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆடம் ஸ்சிப் ஆகியோருக்கும் அனுப்பினார். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புத் துறையின் கண்காணிப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த புகார் தற்போது அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் சபையின் நிரந்தர தேர்வுக்குழு முன் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் 17 உளவுத்துறையைக் கட்டுப்படுத்தி வரும் இயக்குநருக்கு இந்த புகார் சென்றுள்ளது. இந்த புகார் தொடர்பாக வெள்ளை மாளிகை மற்றும் நீதித்துறையிடம் இருந்து சட்டப்பூர்வமான விளக்கத்தை உளவுத்துறை இயக்குநர் கேட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த அந்த அதிகாரி அரசியல்ரீதியாக உருவாக்கப்பட்டவர் என்று அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
யார் அந்த அதிகாரி?
அதிபர் ட்ரம்பின் அரசை ஆட்டம் கான வைக்கும் விதமாக இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்திருப்பவர் ஒரு சிஐஏ அதிகாரி என்று தி நியூயார்க் டைஸ்ம் நாளேடு தெரிவித்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் குறித்த விஷயங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்த அதிகாரி ஒரு நேரத்தில் வெள்ளை மாளிகையில் அனைத்து விதமான பணிகளிலும் இருந்தவர். அதன்பின் அமெரிக்க உளவுத்துறைக்கு பணிமாற்றப்பட்டார் என்று வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை நன்கு அறிந்தவர், உக்ரைன் அரசியல் மற்றும் அந்நாட்டு அரசுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் தொடர்பு ஆகியவை குறித்து அந்த சிஐஏ அதிகாரி நன்கு அறிந்தவர். அதிபர் ட்ரம்புக்கு எதிரான இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்திருக்கும் அந்த சிஐஏ அதிகாரி ஆணா அல்லது பெண்ணா என்பது பாதுகாக்கப்பட்ட விஷயம் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது
ஏஜென்சி தகவல்களுடன் போத்திராஜ்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...