Published : 26 Sep 2019 07:45 PM
Last Updated : 26 Sep 2019 07:45 PM

2020 தேர்தலுக்காக உக்ரைனின் தலையீடு கோரியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன், ராய்ட்டர்ஸ்

அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும் அமெரிக்க ‘விசில்ப்ளோயர்’ ஒருவர் 2020 தேர்தலில் உக்ரைன் தலையீட்டை அமெரிக்க அதிபர் வரவேற்றுள்ளதாக அறிக்கை ஒன்றில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அடையாளம் வெளியிடாத இந்த அதிகாரியின் அறிக்கையை செப்.26ம் தேதியன்று அமெரிக்க காங்கிரஸ் வெளியிட்டது. ட்ரம்பின் இந்த நடவடிக்கையினால் தேசியப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை உளவுக் கமிட்டி விசாரணை வழக்கமாக தொடங்கவிருப்பதற்கு முன்பாக இந்த உளவு அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

பல வாரங்கள் இது குறித்த சர்ச்சைகள் நீடித்த நிலையில் தடைநீக்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நான்சி பெலோசி அதிபர் ட்ரம்புக்கு எதிராக உரிமை மீறல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் ட்ரம்ப் தான் தவறு செய்யவில்லை என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் ஆடம் ஸ்கிஃப் கூறும்போது, “இந்தப் புகார் காங்கிரசிடமிருந்து மறைக்க முடியாதது. மிக மோசமான தவறை இந்த ஆவணம் அம்பலப்படுத்தியுள்ளது. இதனை அவசரமானது, நம்பகமானது என்று இன்ஸ்பெக்டர் ஜெனரலும் அங்கீகரித்துள்ளார்” என்றார்.

பிரச்சினை என்னவெனில் 2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகக் கருதப்படும் ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் மீதும் விசாரணையை முடுக்கி விடக்கோரி அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கியை வலியுறுத்தியதாக அம்பலமாகியுள்ளது. ஹண்டர் உக்ரைனில் எரிவாயு எடுக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர்.

இன்னொரு முறை ட்ரம்ப் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை முறியடிக்க அயல்நாட்டு உதவியை நாடியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x