Published : 25 Sep 2019 09:51 AM
Last Updated : 25 Sep 2019 09:51 AM

இந்தியாவை ஒருங்கிணைத்தவர்; இந்தியாவின் தந்தை மோடி: ட்ரம்ப் புகழாரம்

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு புகைப்படம் பரிசாக அளித்த பிரதமர் மோடி : படம் உதவி ட்விட்டர்

நியூயார்க்

இந்தியாவை ஒரு தந்தையைப் போல் இருந்து ஒருங்கிணைத்துள்ளார் பிரதமர் மோடி. அவரை இந்தியாவின் தந்தை என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். 74-வது ஐ.நா. பொதுக்கூட்டம் 24-ம் தேதி தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது.

முன்னதாக, ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்யதிருந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். அதன்பின், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்ற பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்நிலையில் ஐ.நா. பொதுக்கூட்டத்தின் இடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை நேற்று பிரதமர் மோடி சந்தித்தார். கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பின்போது, ஹுஸ்டன் நகரில் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் சேர்ந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

அப்போது அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே ஏறக்குறைய 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்தச் சந்திப்பு முடிந்த பின் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:

''இந்தியாவின் பிரதமராக மோடி வருவதற்கு முன், அதாவது இதற்கு முன் இந்தியா- அமெரிக்க உறவு என்பது நெருக்கமாக இல்லை. பிரதமராக மோடி வருவதற்கு முன் இந்தியாவில் பல்வேறு குழப்பங்கள், சண்டைகள், பிரச்சினைகள் இருந்தன. ஆனால், பிரதமராக மோடி பதவி ஏற்றபின் ஒரு தந்தையைப் போல் அனைத்து மக்களையும், சமூகத்தையும் ஒற்றுமையாக்கி, ஒருங்கிணைத்துள்ளார். மிக அருமையான பணியைச் செய்துள்ளார். அவர் இந்தியாவின் தந்தை என்று கூறமுடியும். அவரை இனிமேல் இந்தியாவின் தந்தை என்று அழைக்கலாம்.

பிரதமர் மோடியுடனான நட்புறவு எனக்கு மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. பிரதமர் மோடி மிகப்பெரிய ஜென்டில்மேன். மிகப்பெரிய தலைவர். பிரதமர் மோடி அமெரிக்காவின் ஈடு இணையில்லாத பாடகர் எல்விஸ் பிர்ஸ்லியைப் போன்றவர். அமெரிக்கர்கள் அனைவரும் எல்விஸ் பெர்ஸ்லி திரும்ப வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதேபோலத்தான் பிரதமர் மோடியை மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு மிகவும் தெளிவாக, உரக்க ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி செய்தி கூறிவிட்டார். ஆதலால், அந்தs சூழலை பிரதமர் மோடி கையாண்டுகொள்ள முடியும் என நினைக்கிறேன்.

அதேசமயம், காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் விரைவாகத் தீர்வு காண வேண்டும். பிரதமர் மோடியும், பிரதமர் இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் சந்தித்து, அறிமுகமாக வேண்டும். அந்தச் சந்திப்பில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும்''.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x