Published : 23 Sep 2019 04:46 PM
Last Updated : 23 Sep 2019 04:46 PM

இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? கட்சிகளுடன் பேச்சு முடிந்தது; இழுபறி நீடிப்பு: அதிபர் முடிவுக்காக காத்திருப்பு

இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் : படம் உதவி ட்விட்டர்

ஜெருசேலம்

இஸ்ரேலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்த ஆட்சி அமைப்பதற்காக கட்சியினருடன் 2-ம் கட்டப் பேச்சு வார்த்தையை அதிபர் ருவென் ரிவ்லின் முடித்துள்ளார்.

இதனால் அடுத்ததாக யாரை இஸ்ரேலில் ஆட்சி அமைக்க அதிபர் ருவென் ரிவ்லின் அழைக்கப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி, எதிர்க்கட்சியும் இடதுசாரியான பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொயிட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி 31 இடங்களும், எதிர்க்கட்சியான பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சி 33 இடங்கள் கிடைத்தன.

மூன்றாவது இடத்தில் அரபு இஸ்ரேல் கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் லிஸ்ட் கட்சி 12 இடங்களுடன் இருக்கிறது. பழைமைவாதக் கட்சியான ஷாஸ்க்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன.

ஆட்சி அமைப்பதற்கு 61 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கு 55 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இதனால், வேறுவழியின்றி பிரதான எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வொய்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான பென்னி கான்ட்ஸுக்கு பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்தார்.

ஆனால், ப்ளூ அண்ட் வொயிட் கட்சிக்குள் இருக்கும் எம்.பி.க்கள், பலர் அதிபர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பட்ட கருத்துகள் கட்சிக்குள் நிலவியதால், கூட்டணி விஷயத்தை கான்ட்ஸ் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அரபு இஸ்ரேல் கட்சிகளின் துணையுடன் கான்ட்ஸ் ஆட்சி அமைக்க முயற்சி செய்தார். ஆனால், அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களும் இருவேறு கருத்துகளைக் கொண்டிருப்பதால், அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இதனால், யார் அடுத்த பிரதமர் என்ற சூழல் நிலவியது.

இதையடுத்து அதிபர் ருவென் ரிவ்லின் அடுத்த பிரதமர் யார் என்பதையும், யாரால் நிலையான ஆட்சியைத் தரமுடியும் என்பதை அறிய இரு சுற்றுகளாக மற்ற சிறிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எந்த விதமான கருத்தொற்றுமையும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், இரு சுற்றுப் பேச்சு அனைத்துக் கட்சிகளுடன் அதிபர் ரிவ்லின் பேசியுள்ள நிலையில் புதன்கிழமைதான் தனது முடிவை அறிவித்து ஆட்சியை அமைக்கத் தகுதியுள்ள கட்சியை அழைப்பார்.

அவ்வாறு அழைக்கப்படும் முதல் கட்சியினருக்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு, பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும். அவர் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், 2-வது இடத்தில் உள்ள கட்சியினரை அழைத்து அதிபர் ரிவ்லின் வாய்ப்பளிப்பார். அவர்களாலும் 28 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், வேறு வழியின்றி 3-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.

அதிபர் ரிவ்லின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " ஒன்றிய அரசை அமைக்க அனைத்துக் கட்சிகளும் கருத்தொற்றுமை மூலம் சேர்ந்தால் மட்டுமே முடியும். இல்லாவிட்டால், வேறுவழியின்றி மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியது இருக்கும் " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x