Published : 23 Sep 2019 12:19 PM
Last Updated : 23 Sep 2019 12:19 PM
நியூயார்க்
ஐ.நா.வில் நடக்கும் 74-வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி நேற்று இரவு நியூயார்க் சென்று சேர்ந்தார். 27-ம் தேதி வரை பிரதமர் மோடி தொடர் நிகழ்ச்சியில் பரபரப்பாக இயங்க உள்ளார்.
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிவரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி 27-ம் தேதி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி பேசி முடித்த பின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டன் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்புடன் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் நியூயார்க்கில் உள்ள ஜேஎப்கே விமான நிலையத்தில் நேற்று இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அடுத்துவரும் நாட்களில் பிரதமர் மோடி தொடர்ச்சியான நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடியுடன் 75 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர். திங்கள்கிழமை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பங்கேற்கும் பருவநிலை தொடர்பாக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா அர்டெர்ன், மார்ஷெல் தீவின் அதிபர், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் பேசுகின்றனர். பிரதமர் மோடியும் உரையாற்ற உள்ளார்.
நாடுகளில் கரியமிலவாயுவை எவ்வாறு குறைப்பது, பருவநிலை மாற்றத்தைத் தடுப்பது எவ்வாறு உள்ளிட்ட பல்வேறு வழிகள் குறித்துப் பேசுவதற்காக 63 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டன் நகரில் நிகழ்ச்சி முடிந்தபின் நியூயார்க் புறப்பட்ட பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ
இந்தக் கூட்டம் முடிந்தபின், பிரதமர் மோடி, உலக சுதாகாரக் காப்பீடு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதன்பின் ஐநா பொதுச்செயலாளர் மற்றும் பல்வேறு நாடுகள் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள தீவிரவாதிகள் மற்றும் அடிப்படை வாதிகள் வன்முறையைத் தடுக்கும் முயற்சிகள் குறித்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
இந்தக் கூட்டத்தில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரான் அதிபர் இமானுவேல் மேக்ரன், ஆகியோரைச் சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார்.
24-ம் தேதி இந்தியா-பசிபிக் தீவுகள் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தியா, பசிபிக் தீவுகள் தலைவர்கள் மாநாடு முதலில் 2014-ம் ஆண்டில் பிஜி தீவிலும், 2015-ம் ஆண்டு ராஜஸ்தான் ஜெய்ப்பூரிலும் நடந்தது. இப்போது ஐ.நா.வில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
இந்தக் கூட்டத்தில் பிஜி, கிரிபாட்டி, மார்ஷெல் தீவு, மைக்ரோனிசியா, நூரு, பாலு, பபுவா நியூ கினியா, சமோ, சாலமன் தீவுகள், டோங்கா, துவலு, வனுடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்
இந்த நிகழ்ச்சியை முடித்த பின், 25-ம் தேதி புளூம்பெர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின் கரிபீய நாடுகளின் குழுவான காரிகாம் குழுவில் உள்ள நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்தக் குழுவில் ஆன்டிகுவா பர்புடா, பஹாமாஸ், பர்படாஸ், பெலிஸ், டோமினிகா, கிரனெடா, கயானா, ஹெய்தி, ஜமைக்கா, செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின் வின்சென்ட் கிரனடெய்ன்ஸ், சுரிநேம், டிரினாட் அன்ட் டுபாகோ ஆகிய தீவுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்
இதற்கிடையே 23-ம் தேதியும், 25-ம் தேதியும் அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT