Published : 25 Jul 2015 10:41 AM
Last Updated : 25 Jul 2015 10:41 AM
லிபியா அருகே மத்திய தரைக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாயினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமை காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். இவர்கள் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும்போது அவ்வப்போது மத்திய தரைக் கடலில் மூழ்கி பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் லிபியா கடற்குபதியில் நேற்றுமுன்தினம் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்தது. இப்படகில் சுமார் 100 பேர் இருந்த தாக கூறப்படுகிறது இவர்களில் 90 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறும் போது, “படகு விபத்தில் மீட்கப் பட்டவர்கள் சிசிலித் தீவின் அகஸ்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களிடம் பேசியபோது, 35 முதல் 40 பேர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கூறினர்” என்றார்.
இத்தாலியின் நாளேடு ஒன்றில் இது தொடர்பாக நேற்று வெளியான செய்தியில், “லிபியாவின் திரிபோலி நகரில் இருந்து அகதிகளுடன் 3 படகுகள் புறப்பட்டன. இதில் 120 பேருடன் வந்த படகு கடலில் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்தவர்களை வர்த்தகப் படகு ஒன்றும் பின்னர் ஜெர்மனிய கடற்படை கப்பல் ஒன்றும் மீட்டன. இந்த விபத்தில் சுமார் 30 பேர் இறந்ததாக படகில் வந்த 22 வயது இளைஞர் ஒருவர் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய இந்த ஆண்டு மத்தியதரைக் கடலில் பயணம் செய்த சுமார் 1 லட்சத்து 50 பேரில் 1,900-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி இறந்ததாக புலம் பெயர்வோர் தொடர்பான சர்வதேச அமைப்பு இம்மாத தொடக்கத்தில் கூறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT