Published : 04 Sep 2019 09:52 AM
Last Updated : 04 Sep 2019 09:52 AM

ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரஷ்யப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி: படம் ஏஎன்ஐ

விளாதிவோஸ்டாக்,

கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ரஷ்யாவின் தூரக் கிழக்கு மண்டலத்துக்கு பிரதமர் மோடி செல்வது இதுதான் முதல் முறையாகும்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி ரஷ்யாவின் விளாதிவோஸ்டக் நகரை இந்திய நேரப்படி காலை 5.09 மணிக்குச் சென்றடைந்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "ரஷ்யாவில் தூரக் கிழக்கு மண்டலத்தின் தலைநகரான விளாதிவோஸ்டக் நகர் வந்து சேர்ந்தேன். இந்தக் குறுகிய நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அனைத்தும் முக்கியமானது" எனத் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், "ரஷ்யாவில் நடக்கும் 3-வது இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான சந்திப்புக்காகச் சென்ற பிரதமர் மோடிக்கு விளாதிவோஸ்டக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு மண்டல பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்தித்துப் பேசுகிறார். பல்வேறு உலகத் தலைவர்களையும் சந்திக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி தனது பயணத்திற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், "எனது அன்பு நண்பர் புதினுடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் அதேநேரம் மண்டல மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்களது உறவை பன்முகப்படுத்துவதையும், வலுப்படுத்துவதையுமே முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளன. கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்கேற்கவுள்ள இதர உலக நாடுகளின் தலைவர்களையும், இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x