Published : 27 Aug 2019 01:19 PM
Last Updated : 27 Aug 2019 01:19 PM

விமான நிலையத்தில் சூட்கேஸ் திருடியதாக அதிபர் ட்ரம்பின் ஓட்டல் பாட்னரான இந்திய தொழிலதிபர் கைது

வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடும்பத்தினர் நடத்தும் ஓட்டலில் பாட்னராக இருந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தினேஷ் சாவ்லா விமான நிலையத்தில் அடுத்தவர் சூட்கேஸ் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது தான் கவனக்குறைவால் சூட்கேஸ்களை எடுத்துவந்துவிட்டதாகக் தினேஷ் சாவ்லா கூறியுள்ளார். ஆனால், போலீஸார் ஆதாரங்களை சேகரித்து விசாரித்தபோதுதான் ஒரு த்ரிலுக்காகவும், வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக சூட்கேஸ் திருடியதாக தினேஷ் சாவ்லா வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியான செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:

அதிபர் ட்ரம்ப் குடும்பத்தினர் நடத்தும் பல்வேறு ஓட்டலில் பாட்னராக இருந்தவர் தினேஷ் சாவ்லா. சாவ்லாவுக்கு அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் சாவ்லா ஓட்டல்ஸ் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்கள் இருக்கின்றன. இந்த ஓட்டல்களின் சிஇஓவாகவும் சாவ்லா இருந்து வருகிறார்.

இந்நிலையில் சாவ்லா கடந்த வாரம் மெம்பிஸ் நகருக்கு சென்றார். அந்த நகரின் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும்போது தன்னுடைய சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களோடு வேறு ஒருவரின் சூட்கேஸையும் சாவ்லா எடுத்துக்கொண்டு சென்று தன்னுடைய காரில் வைத்துவிட்டார்.

அதன்பின் சூட்கேஸை தொலைத்த பயணி தன்னுடைய பொருட்களை காணவில்லை என்று விமான நிலைய போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அப்போது போலீஸார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து தேடியபோது, சாவ்லா சூட்கேஸை எடுத்துச் சென்றது தெரிந்தது.

சூட்கேஸ் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டல் அதிபர் தினேஷ் சாவ்லா(படவிளக்கம்)

இதையடுத்து தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீஸார் விமான நிலையத்தில் இருந்து சாவ்லா வெளியே செல்வதற்குள் அவரை பிடித்தனர்.
சாவ்லாவின் காரை சோதனை செய்தபோது, அதில் அவரின் பொருட்களோடு மற்றொரு சூட்கேஸ் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த சூட்கேஸில் உள்ள பொருட்கள் மதிப்பு மதிப்பு 4 ஆயிரம் டாலர்கள் இருக்கும்.

அதன்பின் சாவ்லாவை விமானநிலைய காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து போலீஸார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். தொடக்க விசாரணையில் தான் மற்றவருடைய சூட்கேஸ் எனத் தெரியாமல் எடுத்து வந்துவிட்டதாக தெரிவித்தார்.

அதன்பின் போலீஸார் ஆதாரங்களைத் திரட்டி விசாரணை நடத்தியபோது, தான் திருடியதை சாவ்லா ஒப்புக்கொண்டார். "திருடியது தவறுதான் எனக்குத் தெரியும், ஆனால், திருடுவதன் மூலம் தனக்கு ஒரு த்ரிலான அனுபவம் கிடைப்பதாகவும், மனதுக்குள் உற்சாகம் கிடைப்பதாகவும்" தினேஷ் சாவ்லா தெரிவித்தார்.

இதையடுத்து, தினேஷ் சாவ்லாவை போலீஸார் கைது செய்தனர். ஆனால், இந்த ஒரு சூட்கேஸ் மட்டும்தான் சாவ்லா திருடினாரா, இதற்கு முன் என்னென்ன பொருட்களை திருடினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினேஷ் சாவ்லாவும் அவருடைய சகோதரர் சுரேஷ் சாவ்லாவும் சேர்ந்து ஓட்டல் மற்றும் மோட்டல் போன்றவற்றையும், கிளிவ்லாந்தில் நட்சத்திர சொகுசு ஓட்டலையும் நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வரை அதிபர் ட்ரம்ப்புடன் பாட்னராக இருந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1988-ம் ஆண்டில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சாவ்லா குடும்பத்தினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாவ்லாவின் தந்தை வி.கே.சாவ்லாவுக்கு ஓட்டல் அமைக்க டிரம்ப் கிரீன்வுட் பகுதியில் உதவி , கடன் உதவியும் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தொடர்ந்து நட்பு இன்னும் தொடர்ந்து வருகிறது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x