Published : 21 Aug 2019 01:53 PM
Last Updated : 21 Aug 2019 01:53 PM
வாஷிங்டன்,
ஜம்மு காஷ்மீர் விவகாரம் மதத்தோடு அதிகம் தொடர்புடையது, ஜி7 மாநாட்டின்போது பிரதமர் மோடியிடம் காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசுவேன், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வரவேற்றிருந்தார்.
ஆனால், ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம். இதில் மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையிலும்கூட அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.
இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தணிக்கும் வகையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் அதிபர் ட்ரம்ப் பேசியிருந்தார்.
இந்த சூழலில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரான்ஸில் இந்த வார இறுதியில் நடக்க இருக்கும் ஜி7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்திப்பேன். அப்போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க என்னால் முடிந்த அளவு பேசுவேன்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே பயங்கரமான பிரச்சினைகள் இருக்கின்றன. இதைத் தீர்த்து வைக்க என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன், முடிந்தால், மத்தியஸ்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன். இருநாடுகளின் தலைவர்களுடனும் எனக்கு சிறந்த நட்புறவு இருக்கிறது. ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த நேரத்தில் சிறந்த நண்பர்களாக இல்லை.
வெளிப்படையாகக் கூறுகிறேன், ஜம்மு காஷ்மீரில் மிகக் கொந்தளிப்பான சூழல் இருக்கிறது. பிரதமர் மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் நான் நேற்றுப் பேசினேன். இருவரும் தங்கள் நாட்டின் மீது தீராத பற்று வைத்துள்ளார்கள்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சூழல் மதத்தோடு அதிகம் தொடர்புடையது என்பதால் பதற்றமாக இருக்கிறது, சிக்கலாகவும் இருக்கிறது. பொதுவாக மதம் என்பதே சிக்கலான விஷயம்தான். துணைக் கண்டத்தில் இதுதொடர்பான பேச்சு நூற்றாண்டாக நடந்து பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது.
காஷ்மீர் மிகவும் குழப்பமான இடம். இங்கு இந்துக்களும் இருக்கிறார்கள், முஸ்லிம்களும் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது பெற்றுள்ள சிறப்பானவற்றை நீண்டகாலத்துக்கு பெறுவார்கள் என்னால் கூற முடியாது. அங்கிருக்கும் சூழல் பேராபத்தாக இருக்கிறது
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
பிடிஐ
அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT